தவறான நேரத்திலும் சரியான முடிவெடுப்பவன் தான் திறமையான அரசியல்வாதி! ஆனால் சரியான நேரத்தில் தவறான முடிவெடுத்துள்ளதால் மிகப்பெரிய எதிர்ப்பையும், விமர்சனத்தையும் சந்தித்துள்ளார் ஸ்டாலின். 

ராமராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிராக நேற்று சட்டசபையில் எதிர்கட்சிகளும், தமீமுன் அன்சாரியும் ஆடிய ஆட்டங்கள் ஓவர் டோஸாக அமைந்துள்ளன. என்னதான் தன்னை காலங்காலமாக சிறுபான்மை காவலனாக தி.மு.க. காட்டி வந்தாலும் கூட, கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு சற்று முன்பிருந்து நியூட்ரல் நிலையை எடுக்க துவங்கியது அக்கட்சி. ’நமக்கு நாமே!’ பயணம் சென்ற ஸ்டாலின் பல இந்து கோவில்களுக்கு சென்ரார், துளசி உள்ளிட்ட பிரசாதங்களை வாங்கி உண்டார்.

இதை அவரது மனைவி துர்காவின் வழிகாட்டுதல் படியே ஸ்டாலின் செய்ததாக அறிவாலயத்தின் உள்ளிருந்தே அலசல்கள் கசிந்தன. சில பிரச்னைகளுக்கான பரிகாரமாகவும், பிராயச்சித்தமாகவும் அந்த கோவிலின் விசிட் அமையவேண்டுமென துர்கா மிக நேர்த்தியாக திட்டமிட்டு ஸ்டாலினை வழி நடத்தியதாக சொல்லப்பட்டது. ஸ்டாலினும், ‘கழகத்தில் இருப்பவர்களில் தொண்ணூறு சதவீதத்தினர் இந்துக்களே!’ என்று ஒரு அடடா ஸ்டேட்மெண்டை தட்டிவிட்டாராம். 

கருணாநிதியின் மகனிடம் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றத்தால் தி.மு.க.வுக்கெதிரான இந்து வாக்கு வங்கியில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் தி.மு.க.வை ஆதரித்ததாக கூட ஒரு விமர்சனம் எழுந்தது. 
ஆனால் எதிர்கட்சி தலைவரான சிறிது காலத்தில் மீண்டும் ஸ்டாலின் இந்து எதிர்ப்பு மரமேற துவங்கிவிட்டார் என்கிறார்கள் விமர்சகர்கள். பெரியார் சிலையை தகர்ப்போம்! என்று ஹெச்.ராஜா முகநூலில் எழுதியதற்கு எதிராக கடும் குரல் கொடுத்ததில் எந்த தவறுமில்லை. ஆனால் நேற்று தமிழகம் வந்த ரத யாத்திரைக்கு எதிராக ஸ்டாலின் பொங்கியதை தமிழகம் சகித்துக் கொள்ளவில்லை. 

ஹெச்.ராஜா விஷயம் தமிழகத்தில் பரபரப்பாய் போய்க் கொண்டிருக்கும் நிலையில் இந்த ரதயாத்திரையை எதிர்த்தால் நிச்சயம் பெரிய அளவில் வரவேற்பை பெருவோம்! என்று அவரது நெருக்கமான சர்க்கிளில் இருக்கும் யாரோ தவறான வழிகாட்டுதலை தந்திருக்கிறார்கள் என்றே தகவல். மேலும் தமீமுன் அன்சாரி எனும் ஒற்றை எம்.எல்.ஏ.வுக்காக அதுவும் அ.தி.மு.க. கூட்டணியை சேர்ந்தவர் என்ற நிலையிலும் கூட  அவர் இஸ்லாமியர் என்றும் ஒரே காரணத்துக்காக ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து ரதயாத்திரையை எதிர்த்து ரோட்டில் அமர்ந்தது மிகப்பெரிய தவறு! என்கிறார்கள் விமர்சகர்கள். 


ஸ்டாலினின் இந்த செயல் ஒட்டுமொத்த இந்துக்களையும் அவருக்கு எதிராக சூடேற்றி, உசுப்பேற்றி இருக்கிறது. சமூக வலைதளங்களில் ஸ்டாலினை போட்டுப் பொளக்கிறார்கள். ‘இந்து மதம்  என்பது எங்களின் நம்பிக்கை. ராமர் என்பது எங்களின் வழிபாட்டு கரு. அந்த விஷயத்தில் தலையிட, அவர் ரதத்தை தடுக்க நீங்கள் யார்? ராமனை எதிர்ப்பீர்களென்றால் பெருமாள் கோவிலுக்கு செல்லும் உங்கள் மனைவியை தடுக்க வேண்டியதுதானே! ராமனை வணங்குபவன் மதக்கலவர புத்தியுடையவனென்றால் உங்கள் மனைவியும் அப்படிப்பட்டவர்தான் என்கிறீர்களா? உங்கள் கொள்கை விஷயத்தில் கட்டிய மனைவியை தடுக்க இயலாத நீங்கள் மக்கள் விரும்பும் விஷயத்தை எதிர்ப்பது எப்படி சரியாகும்?’ என்று கேட்டிருக்கிறார்கள் சிலர். 

இந்நிலையில் இந்த ரதயாத்திரைக்கு தேவையில்லாமல் எதிர்ப்பை காட்டி, அதற்கு பப்ளிசிட்டி தேடிக் கொடுத்ததோடு வீணாக தமிழக இந்துக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டோம்! என்று புலம்பிக் கிடக்கிறார் ஸ்டாலின்.