why stalin decide to campaign only three days in rk nagar

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த ஆட்சியாளர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் நடக்க இருந்தபோதும், தினகரனுக்கு ஆதரவாக தொப்பி அணிந்துகொண்டு முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் வாக்கு சேகரித்தனர். தற்போது தினகரன் ஓரங்கட்டப்பட்ட நிலையில், அவருக்கும் திமுகவும் எதிராக பிரசாரம் செய்து, மதுசூதனனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கின்றனர்.

அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்டு இரட்டை இலையையும் இழந்து நிற்கும் தினகரன், இந்த தேர்தலில் வெற்றி பெற்று தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவு தங்களுக்குத்தான் உள்ளது என்பதை நிரூபிக்க போராடுகிறார்.

எப்படியும் அதிமுகவின் ஓட்டுவங்கி இரண்டாகப் பிரியப்போகிறது. வாக்குவங்கியின் பிரிவு, அதிமுக அரசின் மீதான அதிருப்தி ஆகியவற்றை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அறுவடை செய்து வெற்றியை பெற்றே தீர வேண்டும் என திமுகவும் தீவிரமாக செயல்படுகிறது.

இதற்கிடையே, லயோலா கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம் மற்றும் பத்திரிகையாளர் அன்பழகன் தலைமையிலான குழுக்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளின் முடிவிலிருந்து பிரதான போட்டி என்பது திமுகவிற்கும் தினகரனுக்கும் இடையிலேயே இருக்கும் என தெரிகிறது. அந்த இரண்டு கருத்து கணிப்புகளிலும் அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

திமுக, தினகரன், கருத்துக்கணிப்பு என அதிமுகவிற்கு இருக்கும் பல சவால்களையும் கடந்து வெற்றிக்காக போராடி வேண்டி உள்ளதால் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என அனைவரும் களத்தில் குதித்து மதுசூதனனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துவருகின்றனர்.

ஒருபுறம் மதுசூதனனுக்கு ஆதரவாக ஆட்சியாளர்கள், மறுபுறம் தினகரன் என ஆர்.கே.நகரே அதகளப்பட்டு வரும் நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மட்டும் இதுவரை ஆர்.கே.நகரில் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. நாளை முதல் 19ம் தேதி வரை மூன்று நாட்கள் ஸ்டாலின் பிரசாரம் செய்வார் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இத்தனை நாட்களாக அனைவரும் ஆர்.கே.நகரில் முகாமிட்ட நிலையில், ஸ்டாலின் மட்டும் பரபரப்பே இல்லாமல், பொறுமையாக களத்திற்கு வருகிறார். அதிமுக அரசின் மீதான மக்களின் அதிருப்தியும், அதிமுகவின் வாக்குவங்கி பிரிவதுமே நமக்கு வெற்றியை பெற்று தந்துவிடும் என்ற நம்பிக்கையில் ஸ்டாலினும் திமுகவும் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதிமுக அரசின் மீதான அதிருப்தியை அறுவடை செய்தாலே வெற்றி பெற்றுவிடலாம் என ஸ்டாலினும் திமுகவின் மூத்த நிர்வாகிகளும் கருதுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதனால், பொழுதெல்லாம் ஆர்.கே.நகரில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கடைசி மூன்று நாட்கள் பிரசாரம் செய்தாலே போதும் என்ற முடிவுக்கு ஸ்டாலின் வந்துள்ளார். அதன் விளைவுதான் கடைசி நேரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பிரசாரம் என்ற முடிவு என கூறப்படுகிறது.