Why should not I come as Chief Minister? - Thanga. Thamizhselvan

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரும்போது நான் முதலமைச்சராக ஆகக்கூடாதா? என்று தங்க.தமிழ்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் புரட்சி பயணம் என்ற பெயரில் தமிழக மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., டி.டி.வி.தினகரன் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் தினகரன் பங்கேற்றார். அப்போது, ஓ.என்.ஜி.சி.-க்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் கதிராமங்கலம் பகுதி மக்களிடையே அவர் பேசினார்.

இப்போது, ஆட்சியில் உள்ளவர்களில் 6 பேரைத் தவிர எங்கள் அணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். அப்படி வந்தால், தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதில் நான் முதலமைச்சராக பொறுப்பை ஏற்க மாட்டேன். என்னோடு வந்த 18 எம்.எல்.ஏ.-க்களும் தியாகிகள்; அவர்களில் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி தரப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்ச்செல்வன், ராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தங்க.தமிழ்செல்வனிடம், இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், துரோகிகள் மட்டும் வெளியில் சென்றால் போதும்; மற்ற எம்.எல்.ஏ.க்கள் ஒத்துழைத்தால், இந்த ஆட்சி 3 வருடங்களுக்கு நீடிக்கும் என தினகரன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்; அவர் நல்ல கருத்தைத்தான் கூறியிருக்கிறார் என்றார்.

நீங்கள் முதலமைச்சராக வாய்ப்பிருக்கிறதா? என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தங்க.தமிழ்செல்வன், ஓ.பி.எஸ்., மற்றும் ஈ.பி.எஸ்., ஆகியோர் முதலமைச்சராக வரும்போது, நான் ஏன் முதலமைச்சராக வரக் கூடாது? என கேள்வி எழுப்பினார்.