ரஜினி வந்துதான் தமிழ்நாட்டை காப்பத்தணுமா என்ன! ஏன் எடப்பாடி இப்படி பண்றார்?: சுருக் சுருக்குன்னு ஊசி குத்தும் டாக்டர். கிருஷ்ணசாமி. 

ஸ்டாலினெல்லாம் இன்னைக்குதான் பேண்ட் - சர்ட் போட்டு அரசியல் பண்ண ஆரம்பிச்சிருக்கார். ஆனால், டாக்டர் கிருஷ்ணசாமியெல்லாம் பல வருஷமா இப்படி கார்ப்பரேட் லுக்லதான் அரசியல் பண்ணிட்டு இருக்கிறார். ராஜாவும் நானே, மந்திரியும் நானே! என்று ஒன் மேன் ஆர்மியாக புதிய தமிழகம் கட்சியை வழி நடத்திக் கொண்டிருக்கும் கிருஷ்ணசாமி ஒரு சென்சிடீ அரசியல் தலைவர். 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்து அ.தி.மு.க.வின் கூட்டணியில் இருக்கும் டாக்டர், இதோ இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் அக்கட்சிக்கான ஆதரவை கைகழுவிவிட்டார். கேட்டால், தேவேந்திர குல வேளாளர் நலன் சார்ந்த அரசாணையை அ.தி.மு.க. அரசு வெளியிடாததால் இந்த முடிவு! என்கிறார். ஆளுங்கட்சிக்கு இடைத்தேர்தலில் ஆதரவு கிடையாது! என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், ஆன் தி வேயில் ரஜினி மற்றும் எடப்பாடியார் இருவரையும் போட்டுத் தாளிக்கவும் செய்கிறார் கிருஷ்ணசாமி. 

அப்படி என்ன சொல்லிவிட்டார் டாக்டர்.....

“எங்கள் மக்களின் சமுதாயமான தேவேந்திர குல வேளாளர்! நலன் சார்ந்த அரசாணை குறித்து சாதகமான முடிவை அறிவிக்க வேண்டும்! என்ற கோரிக்கையை வைத்துத்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தோம். ஆனால் இவ்வளவு நாளாகியும் இன்று வரையில் அதில் முன்னேற்றமில்லை. நாங்கள் கேட்கும் அறிக்கையை வெளியிடுவதால்  அரசுக்கு எந்த நிதிச்சுமையும் உருவாகப்போவதில்லை, யாருக்கும் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும் எடப்பாடி ஏனோ இதற்கு ரொம்பவே தயங்குகிறார். ஏன் இப்படி பண்ணனும்? இந்த தயக்கம் எடப்பாடிக்கு தேவையற்றது. 

எங்கள் மக்களின் நலனை புறக்கணித்ததால்தான் நாங்கள் ஆதரவுக்கு மறுப்பு சொல்லியிருக்கிறோம். மேலும் கூட்டணி விஷயத்தில் அ.தி.மு.க. அப்படியொன்றும் சரியாக செயல்படுவதில்லை. இப்ப மட்டுமில்லை நாடாளுமன்ற தேர்தல், வேலூர் தேர்தல், இந்த இடைத்தேர்தல்னு எல்லாவற்றிலும் அவங்க இப்படித்தான் சரியில்லாம நடந்துக்கிறாங்க. எங்ககிட்ட மட்டும்னு இல்லை, கூட்டணியின் எல்லா கட்சிகளிடமும் அவங்க போக்கு இப்படித்தான் இருக்குது. அதனால் இவங்க கூட இனி இணைந்து செயபடமாட்டோம். எங்க கொடியை கூட பயன்படுத்தக்கூடாதுன்னு சொல்லிட்டோம்.” என்றவர்....

“தமிழகத்தில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை, திரையுலகில் இருந்து ரஜினிகாந்த் வந்துதான் நிரப்பணும், தமிழகத்தை காப்பாற்றியாகணும் அப்படின்னெல்லாம் நான் நினைக்கலை. ஆனால் ஒண்ணு மட்டும் உண்மை. திராவிட கட்சிகளுக்கு மாற்று இப்போது அவசியம், அவசரம்.” என்று சுருக்கென தன் கூட்டணி தலைவனான அ.தி.மு.க.வுக்கும் சேர்த்து ஊசி போட்டிருக்கிறார். 
டாக்டர்ல!

-    விஷ்ணுப்ரியா