ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றன. இரு அணிகளும் ஒரே கட்சியின் சின்னத்தை பயன்படுத்துவதால், தேர்தல் ஆணையம், அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையை முடக்கியது.

இதனால், பிளவுபட்டு கிடக்கும் இரு அணிகளும் மீண்டும் இணைவதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில், இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற டிடிவி.தினகரனை, டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

டிடிவி.தினகரன் கைது செய்யப்பட்டதற்கு மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜகதான் காரணம் என பரவலாக பேசப்படுகிறது. ஆனால், இது தவறான குற்றச்சாட்டு என ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த பொன்னையன் கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்ததை போல், அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பம் ஒ.பன்னீர்செல்வத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுத்தது ஏன். எப்படி கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வத்துக்கு திடீரென மத்திய அரசு ‘ஒய்’ பாதுகாப்பு கொடுத்துள்ளது. அந்த பாதுகாப்பை அவருக்கு எப்படி கொடுக்க முடியும். அவர் என்ன அந்த அளவுக்கு அச்சுறுத்தளான ஆளா.

இவை அனைத்தும் பாஜக நடத்தும் நாடகம். இதற்கு, அவர்கள் தலையாட்டி கொண்டு இருக்கிறார்கள். அதிமுக விசுவாசிகள் என சொல்லிக் கொள்ளும் கைகூலிகள். பாஜகவுக்கு விலை போனவர்கள்.

டிடிவி.தினகரன் கைது செய்யப்பட்டதற்கு, பாஜகதான் காரணம். பாஜக நடத்தும் இந்த அரசியல் விளையாட்டுககு அர்த்தம் இல்லை.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், இரு அணிகளும் இணைவதில் கனிவான பேச்சு வார்த்தை நடப்பதாகவும், விரைவில் இணைவதாகவும் கூறினார். அதன் பின்னணி, நேற்று இரவே டிடிவி.தினகரன் கைது செய்யப்பட்டது.

நேற்று இரவே டிடிவி.தினகரன் கைது செய்யப்படுவார் என ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றாக தெரியும். அதை வைத்துதான் அவர், செய்தியாளர்களிடம் கூறினார்.

இத்தனை சாராணமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏன் ஒய் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அவர் மீது மத்திய அரசுக்கு என்ன அக்கறை. அதற்கான தேவை ஏன் வந்தது. இவை அனைத்து பாஜகவின் நாடகம். அதிமுகவை உடைக்க சதி செய்கிறது.

தமிழகத்தில் இந்தியை திணிக்க வேண்டும். இந்துத்வா என்ற அமைப்பை வளர்க்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார்கள். அதற்காகவே இதுபோன்ற செயல்களை செய்து வருகிறார்கள். அதற்கு, அதிமுகவின் பெயரை கூறும் கை கூலிகளும் தலையாட்டுகிறார்கள். இவர்கள் அனைவரும் அதிமுகவுக்கு வந்த சாபங்கள்.

இத்தனை நாள், சசிகலாவின் படத்தையும், பேனரை தொட்டு வணங்கியவர்கள், இன்று தலைமை அலுவலகத்தில் இருந்து எப்படி அகற்ற செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.