Why political leaders did not talk about Thirumani death - Actress Kasthuri

காஷ்மீரில் உயிரிழந்த திருமணியின் இறப்பு குறித்து, தமிழக அரசியல் தலைவர்கள் வாய் திறக்காதது ஏன்? என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவள்ளூரைச் சேர்ந்த திருமணி என்ற இளைஞர் சமீபத்தில் தனது நண்பர்களுடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றபோது, பர்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கல்வீச்சுத் தாக்குதலில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. 

ரத்த வெள்ளத்தில் மிதந்த திருமணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சையின் பலனின்றி சில நிமிடங்களில் மரணம் அடைந்தார். திருமணியின் பெற்றோருக்கு ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி ஆறுதல் கூறி இருந்தார்.

இந்த நிலையில், நடிகை கஸ்தூரி, தனது டுவிட்டர் பக்கத்தில் திருமணியைக் கல்லெறிந்து கொன்றவர்களை கண்டித்து, தமிழக தலைவர்கள் யாரும் வாயை திறக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது டுவிட்டர் பக்கத்தில், திருமணியை கல்லெறிந்து கொன்ற மூர்க்கர்களை கண்டித்து நம்ம தலைவர்கள் யாரும் வாயே திறக்காதது ஏன்? காஷ்மீர் தீவிரவாதிகளை, தேச துரோகிகளை விமர்சித்தால் தமிழ்நாடு முஸ்லிம்களின் வெறுப்பை பெறவேண்டி வரும் என்ற கணக்கா? என்றால், நம் தமிழ் இஸ்லாமிய சகோதரர்களை இதைவிட இழிவுபடுத்த முடியாது என்று பதிவிட்டுள்ளார்.