பட்டியலின மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ளதாக கூறும் தொல்.திருமாவளவன் வாய் மூடி மௌனம் காப்பதன் மர்மம் என்ன? காங்கிரஸ் கட்சி இதை ஆதரிக்கிறதா? கம்மிகளின் கதறல் காணாமல் போனது ஏன்?”

அரசு ஊழியர் ராஜேந்திரனை சாதி ரீதியிலாக பேசி அவமானப்படுத்திய அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சாதி சொல்லி திட்டிய அமைச்சர்

முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதியைச் சொல்லி அமைச்சர் ராஜ கண்ணப்பன் திட்டிய விவகாரம் சர்ச்சையானது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், “அமைச்சர் என் சாதியை சொல்லி மீண்டும் மீண்டும் திட்டினார். நான் சொல்வதை எதையும் நீ கேட்க மாட்டாயா? சேர்மன் சொன்னால் மட்டும்தான் கேட்பியா? என்று கேட்டார். மேலும் உன்னை இங்கிருந்து இடம் மாற்றி காட்டட்டுமா? என்னை 6 முறை சாதி பெயரை சொல்லி திட்டினார். எனக்கு 57 வயதாகிறது. இந்த வயதில் என்னை இப்படி யாரும் திட்டியது இல்லை. எனக்கு மனக்காயம் ஏற்பட்டுள்ளது.” என்று ராஜேந்திரன் குமுறியிருந்தார்.

பறிக்கப்பட்ட இலாகா

இந்நிலையில் ராஜ கண்ணப்பனை போக்குவரத்துத் துறையிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றியும், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவசங்கரை போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கும்படியும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார். அந்தப் பரிந்துரையை ஏற்று ராஜ கண்ணப்பனை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக மாற்றி ஆளுநர் உத்தரவுப் பிறப்பித்தார். ராஜ கண்ணப்பனை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றியது குறித்தும் அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி போன்றவை விமர்சனங்களை முன் வைத்தன. 

பாஜக கேள்வி

இந்நிலையில் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாரயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளார். அதில், “ஏதோ ஒரு போலி செய்தியை பகிர்ந்த பாஜக நிர்வாகி சேலம் அருண் பிரசாத்தை கைது செய்த திமுக அரசு, அரசு ஊழியர் ராஜேந்திரனை சாதி ரீதியிலாக பேசி அவமானப்படுத்திய அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காதது ஏன்? பட்டியலின மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ளதாக கூறும் தொல்.திருமாவளவன் வாய் மூடி மௌனம் காப்பதன் மர்மம் என்ன? காங்கிரஸ் கட்சி இதை ஆதரிக்கிறதா? கம்மிகளின் கதறல் காணாமல் போனது ஏன்?” என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படிங்க: ஜெயலலிதா அமைச்சரவையில் பவர்ஃபுல் அமைச்சர்.. திமுகவில் டம்மியாக்கப்படுகிறாரா ராஜகண்ணப்பன்.?