தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குறித்து தொடர்ச்சியாகவும், அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் நக்கீரன் இதழில் செய்திகள் வெளியான நிலையில் அதன் ஆசிரியர் கோபால் மீது புகார் அளிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. 

நக்கீரன் வார இதழில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி துணை பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை ஒன்று வெளியானது. அந்த கட்டுரையில், பேராசிரியை நிர்மலா, தான் 4 முறை ஆளுநரை சந்தித்ததாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. தொடர்ந்து ஆளுநர் மீது அவதூறு கூறும் வகையில் நக்கீரன் இதழில் செய்திகள் வெளிவந்த நிலையில், அதன் ஆசிரியர் கோபால் மீது ஆளுநர் மாளிகை தரப்பு புகார் அளித்தது.

இந்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். புனே செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தபோது, நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசதுரோக வழக்கும் போடப்பட்டது. கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலிடம்.

போலீசார் விசாரணை நடத்தினர். இதன் பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை ரிமாண்ட் செய்ய முடியாது என்று எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மறுத்தார். இதைடுத்து, நக்கீரன் கோபால் சொந்த ஜாமினில் வெளியே வந்தார். இதனிடையே, நக்கீரன் இதழில் பணிபுரிபவர்கள், முன்ஜாமின் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. நக்கீரன் பத்திரிகையில் வெளியான செய்திக்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக ஆளுநரை தொடர்புபடுத்தி வெளியான செய்தியில் சிறிதும் உண்மை இல்லை. அது முழுக்க முழுக்க பொய். ஆளுநருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அச்சுறுத்தல்கள் விடுப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. போலீஸ் விசாரணையின்போது நிர்மலா தேவி கொடுத்துள்ள வாக்குமூலத்தன் மூலம் உண்மை வெளியாகும். தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநர் குறித்து தொடர்ச்சியாகவும், அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. நீண்ட நாட்களாக பொறுமை காத்த நிலையிலும், அவதூறு தொடர்ந்த காரணத்தாலும் நக்கீரன் கோபால் மீது புகார் அளிக்கப்பட்டது. கடந்த ஓராண்டு காலத்தில் ஆளுநர் மாளிகைக்கு துணை பேராசிரியை நிர்மலா தேவி வந்ததே இல்லை. ஆளுநரையோ, அவரது செயலாளரையோ, அல்லது அதிகாரிகளையோ நிர்மலாதேவி சந்திக்கவே இல்லை என்று ஆளுநர் மாளிகை தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.