why kanimozhi is particular about tirupathi hundi
திருச்சியில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஒரு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய திமுக., எம்பி., கனிமொழி, திருப்பதி உண்டியல் குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆமாம், அந்தத் திருப்பதி உண்டியல் மீது அப்படி என்னங்க கனிமொழிக்கு ஒரு கண்ணு.. என்று கேள்வி எழுப்புகின்றனர் வலைத்தளவாசிகள்.
இந்தக் கூட்டத்தில் பேசிய கனிமொழி உதிர்த்த வார்த்தைகள் இவை...
நான் எம்பி., யாக இருப்பதால், என்னை சில கமிட்டிகளில் போட்டு வெளியில் அழைத்துச் செல்வார்கள், அப்படித்தான் வெங்கய்ய நாயுடு தலைமையில் ஒரு முறை திருப்பதிக்கு செல்ல நேர்ந்தது. அங்கே வரிசை கட்டி நிற்க வைத்திருக்கிறார்கள். 300 ரூபாய் டிக்கெட் என்றால் ஒரு வரிசை, சாதாரணமாக வருபவர்களுக்கு ஒரு வரிசை என்று கடவுள் கூட பாகுபாடு காட்டுகிறார் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
என் அருகில் நின்றிருந்த எம்பி., உங்களுக்குத்தான் கடவுள் என்றால் பிடிக்காதே! ஆனால் இங்கே இத்தனை மக்கள் இருக்கிறார்கள் பார்த்தீர்களா? அவர்களை எப்படி கடவுள் பாதுகாக்கிறார்? வேண்டியதை எல்லாம் கொடுக்கிறார். அந்த நம்பிக்கையில் இத்தனை பேர் வருகிறார்களே என்று என்னிடம் கேட்டார்.
நான் சொன்னேன்... இதோ அங்கே உண்டியல் இருக்கிறதே. அதற்குப் பக்கத்தில் துப்பாக்கி ஏந்திய காவல் இருக்கிறதே! கடவுள் அப்படி ஒரு சக்தி வாய்ந்தவர் என்றால் இந்தப் பாதுகாப்பு எதற்கு என்று கேட்டேன்...
இவ்வாறு பேசினார் கனிமொழி. இதனைக் குறிப்பிட்டுள்ள வலைத்தள வாசிகள், அந்தப் பாதுகாப்பையும் விலக்கி விட்டு, உண்டியலை ஒட்டுமொத்தமாக கொள்ளை அடித்து விடலாம் என்று கனிமொழி கணக்கு போடுகிறாரா என்று கலாய்த்துள்ளனர்.
கடவுளை தரிசிக்க விஜபிக்கு என்ன தனி வழி? பொது மக்களுக்கு என்ன தனி வழி? என்று கேட்கிறார் கனிமொழி. ஒரு மாவட்டச் செயலாளர் உங்களைப் பார்க்க வந்தால் உடனே டீ காபி கொடுத்து பேசுவீங்க... ஒரு தொண்டன் வந்தா உடனே பார்ப்பீங்களா? இல்லை பார்க்கத்தான் விடுவாங்களா? நீங்கதான் கட்சியினரை பாகுபாடே இல்லாம பாக்கற ஆளாச்சே...அப்புறம் ஏன் இப்படி? என்று கேள்வி எழுப்புகிறார்கள் பேஸ்புக்கில்!
கனிமொழியின் இன்னொரு கேள்வி.. கடவுளை நம்பும் பக்தர்கள் விபத்தில் அடிபட்டால் கோவில்களுக்கு ஓடாமல் மருத்துவமனைக்குத்தானே ஓடுகிறார்கள்..? என்று! உங்களுக்குக்கூடத்தான் மக்கள் மேல் அவ்வளவு நம்பிக்கை.. பிறகு ஏன் தேர்தல் அறிவித்தால் மக்களைத் தேடி ஓடுகிறீர்கள்? நம்பிக்கையோட வீட்லயே உட்கார்ந்திருக்கவேண்டியது தானே? என்று கேட்கிறார்கள் அடுத்து!
பெரியாரிடம் இருந்து வந்த அண்ணா, பின்னால் நிலைமையை உணர்ந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என இறங்கி வந்து சாமான்ய மக்களிடம் நெருக்கமானார்.. எம்ஜிஆர் ஒரு படி மேலே போய், ஒரிஜினல் ஆன்மீகவாதியாகக் காட்டிக் கொண்டதால்தான் சாமான்ய மக்கள், அதிலும் பெண்கள் அவரை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதினார்கள்.
கருணாநிதிதான் வேற்று மதத்தினரை சேர்த்துக்கொண்டு இந்துக்களையும் அவர்களின் நம்பிக்கையையும் கேலி பேசி அடிக்கடி பல்பு வாங்கிக் கொள்கிறார். திமுகவுக்கு கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகை போலல்லாமல் இந்துக்கள் பண்டிக்கை மட்டும் விடுமுறை தினமாக மாறிவிடுவதைப் பார்த்து வருடா வருடம் உலகமே சிரிக்கிறது. மூடநம்பிக்கைகளைச் சாடுவதை விட்டுவிட்டு, சாதாரண நம்பிக்கையைக் கூட சாடிப் பேசுவது தேவையில்லாத ஆணியைப் பிடுங்குகிற வேலை... என்கிறார் பேஸ்புக்கில் ஒருவர்.
இந்நிலையில், பகவத் கீதை பாகுபாடுகளை உருவாக்குகிறது என்று பேசிய கனிமொழிக்கு இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் தனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவர் தனது கண்டனத்தில், கனிமொழி, திருப்பதி ஏழுமலையானைப் பற்றி விமர்சித்துள்ளார். இவரது பேச்செல்லாம் கருப்புச் சட்டை சீருடையில், மேடைக்கு முன்னால் நிற்கும் சிலரின் கைத்தட்டலுக்காக இருக்கலாம்.
ஆனால், இவரது கருத்தை இவரது தாய்கூட ஏற்கமாட்டார் என்பது அவருக்கே தெரியும். 2ஜி வழக்குத் தீர்ப்புக்கு முன்னர் எத்தனை கோயிலுக்குச் சென்று நேர்த்தி செய்தார்கள் என்ற பட்டியலும் இருக்கிறது. கனிமொழி ஒன்று அரசியல்வாதியாக இருக்கட்டும், இல்லையேல் பகுத்தறிவு என்ற பெயரில் இந்து விரோத கருத்துக்களைப் பரப்பும் செயலைச் செய்யட்டும். இந்து விரோத கருத்தைக் கூறிக்கொண்டு செயல்படுவது, அவர் தான் ஏற்றுக்கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவிப் பிரமாணத்திற்கு எதிரானது என்பதை புரிந்துகொள்ளட்டும்.
உலக நாத்திகக் கூட்டம் எனக் கூட்டிய திராவிடர் கழக வீரமணி, அதனை மூட நம்பிக்கையையே வியாபாரமாக நடத்தும் கிறிஸ்தவ மத போதகர் எஸ்றா சற்குணத்தை வைத்து துவக்கியதிலிருந்தே இது கடவுள் மறுப்புக் கூட்டம் இல்லை, இந்து மத விரோதக் கூட்டம் என்பது உறுதியாகிறது.
கனிமொழி, இதே கருத்தை மற்ற மத நம்பிக்கையின் மீது கூறுவாரா? திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் தன்மானமுள்ள இந்துக்களே, `இப்படிப்பட்ட அறிவார்ந்த கருத்துகளை நீங்கள் ஏன் வேற்று மதங்களைப் பற்றியும் ஒரு விஷயத்திலாவது பேச கூடாது?' எனக் கேளுங்கள். அப்படி தப்பித் தவறி பேசினால் என்ன நடக்கும் என்பதை அவர்கள் வாயாலேயே புரிய வையுங்கள். ஒன்று அவர்களது இந்து விரோத செயல்பாட்டை மாற்றுங்கள், இல்லையேல் தன்மானத்தோடு, சுயமரியாதையோடு திமுகவைவிட்டு வெளியேறுங்கள் என திமுகவில் உள்ள இந்துத் தொண்டர்களிடம் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் வீரமாணிக்கம் சிவா என்பவர், சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று அளித்த புகார் மனுவில் திருச்சியில் நடைபெற்ற நாத்திகர்கள் மாநாட்டில் பேசிய கனிமொழி, “திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தி இருந்தால் எதற்கு காவல்” எனக் கூறியுள்ளார். இது 150 கோடி இந்துக்களின் மனதை புண்படுத்தி உள்ளது. ஒரு பொறுப்புள்ள ராஜ்ய சபா உறுப்பினர் கருத்து தெரிவித்துள்ளது, நமது அண்டை மாநிலங்களில் வாழும், குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா வாழ் தமிழர்களின் மீது தாக்குதல் நடத்திட வாய்ப்புள்ளது. எனவே உலகமெங்கும் வாழும் இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ள தி.மு.க. ராஜ்ய சபா உறுப்பினர் கனிமொழியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.” என்று கோரியுள்ளார்.
கனிமொழியைக் குறித்து கருத்து கூறும் பலரும், மத்தியில் முரசொலி மாறனுக்குப் பின்னர், குறிப்பாக தயாநிதி மாறனுக்குப் பின்னர், திமுக., சார்பில் அவரது குடும்ப உறுப்பினராக கனிமொழியைத்தான் முன்னிறுத்தினார் கருணாநிதி. அவர் தன்னை மத்திய அரசுடன் அல்லது மத்தியில் உள்ள தலைவர்களுடன் சுமுகமாக இருந்து நல்ல நட்பு பேணி மாநிலத்துக்கு ஒரு பாலமாக இருக்க வேண்டும். அவர் அரசியல் வானில் வளர வேண்டிய கால கட்டம் இன்னும் உள்ளது. அந்த வாய்ப்புகளை எல்லாம் அவர் தானாகவே வீழ்ச்சி அடையச் செய்ய, இது போன்ற மாநாடுகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். இது திமுக.,வின் எதிர்காலத்துக்கும் நல்லதல்ல என்று எச்சரிக்கிறார்கள். கனிமொழி இதனை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
