தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக அரசு தமிழக உரிமைகளை மத்திய அரசுக்கு காவு கொடுத்து வருகிறது. வன்னியர்களுக்கு 15 சதவீத உள் ஒதுக்கீடு கோரி 30 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான வன்னியர் சங்கங்கள் போராடி வருகின்றன. ஆனால் பாமக தலைமைக்கு இதைப் பற்றியெல்லாம் எந்த அக்கறையும் இல்லை. நோட்டுக்காகவும் சீட்டுக்காகவும்  கொள்கைகளை அதிமுகவிடம் பாமக விற்பனை செய்துள்ளது.
தன்னுடைய கல்வி நிறுவனங்கள் எல்லாம் வன்னியர் நல வாரிய சொத்துக்களுடன் சேர்ந்துவிடாமல் இருக்கவே பாஜக, அதிமுக கூட்டணியில் டாக்டர் ராமதாஸ் இருந்து வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை தமிழக முதல்வரை ‘டயர் நக்கி’ என்று டாக்டர் ராமதாஸ் விமர்சித்து வந்தார். அதை முதல்வரும் மறந்து விட்டு ராமதாஸுடன் கூட்டணி சேர்கிறார். தமிழகத்தில் 4 கட்சித் தலைவர்கள் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். எனவே நெய்வேலி தொகுதியில் போட்டியிட கடும் போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது. அந்தத் தொகுதியை திமுக எனக்கு ஒதுக்கினால் நான்  போட்டியிடுவேன்.” என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.