why edappadi take someone else to meet Prime Minister
ஒரு முதல்வர் பிரதமரை சந்தித்து பேசும்போது, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருப்பது வழக்கம். முதல்வரும், பிரதமரும் தனியாக பேசுவதும் வழக்கம்.
ஆனால், பிரதமருடனான சந்திப்பில் கொஞ்ச நேரத்தில் அதிகாரிகளை வெளியேற்றிவிட்டு, முதல்வர் எடப்பாடி, தம் உறவினரோடு பிரதமரை சந்தித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசை, பாஜகவே இயக்குகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதற்கேற்ப, எடப்பாடியும், பன்னீரும், மாறி, மாறி பிரதமரை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி, டெல்லியில் பிரதமரை சந்தித்து பேசினார். அவருடன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதல்வரின் செயலாளர் சிவ தாஸ் மீனா, வழக்கறிஞர் மாணிக்கம் ஆகியோர் சென்றிருந்தனர். அமைச்சர்கள் யாரும் செல்லவில்லை.
பிரதமரை சந்தித்த 10 நிமிடத்தில், அதிகாரிகள் வெளியேறி விட்டனர். அதன் பின்னர் வழக்கறிஞர் மாணிக்கத்தை மட்டுமே அருகில் வைத்து கொண்டு, எடப்பாடி பேசியுள்ளார்.
வழக்கறிஞர் மாணிக்கம், முதல்வர் எடப்பாடியின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது. முதல்வர் எடப்பாடி, பிரதமருடன் தனிப்பட்ட விஷயங்கள் சிலவற்றை பேசியதால், அவரது உறவினர் மாணிக்கத்தை மட்டும், அருகில் வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.
துணை சபாநாயகர் தம்பிதுரை, சசிகலாவின் தீவிர ஆதரவாளர் என்பதாலும், மற்ற அமைச்சர்களை எடப்பாடி பெரிதாக நம்பாததாலும், பிரதமருடான சந்திப்பில், அவர்களை தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது.
பிரதமருடனான சந்திப்புக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி, பிரதமருடன் அரசியல் பேசவில்லை, தமிழக திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மட்டுமே பேசப்பட்டது என்று அதற்கான பட்டியலையும் வாசித்தார்.
தமிழகத்தின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் மட்டுமே பேசப்பட்டது என்றால், அமைச்சர்கள், அதிகாரிகள் தவிர்த்துவிட்டு, உறவினரை மட்டுமே அருகில் வைத்துக் கொண்டு பிரதமரிடம் பேச வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுந்துள்ளது.
