கேந்திர வித்யாலயா பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான வயதை 6 ஆக உயர்த்தியதற்கான பின்புல காரணம் என்ன என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். 

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான வயதை 6 ஆக உயர்த்தியதற்கான பின்புல காரணம் என்ன என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலங்களவையில் வைகோ எழுப்பிய கேள்விகளையும் அதற்கு மத்திய அமைச்சர் அளித்த பதிலையும் வைகோ அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில், வைகோ, கீழ்காணும் கேள்விகளுக்கு, கல்வி அமைச்சர் விளக்கம் தருவாரா? 2022 கல்வி ஆண்டிற்கான, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கைக்கான வயது வரம்பை, ஐந்தில் இருந்து 6 ஆக உயர்த்தி இருக்கின்றீர்களா? அவ்வாறு இருப்பின், தன்னிச்சையான இந்த நடவடிக்கைக்கான பின்புலக் காரணங்கள் என்ன? எல்கேஜி வகுப்புகளை முடித்த இலட்சக்கணக்கான குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றார்களா? அவ்வாறு இருப்பின், அரசு தன் நிலையை மாற்றிக்கொள்ளுமா? முந்தைய வழமை போல் சேர்க்கை நடைபெறுமா? இல்லை என்றால், அதற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, 2022/23 கல்வி ஆண்டில், 1.04.2022 முதல், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதலாம் வகுப்பு சேர்க்கைக்கான வயது வரம்பு, 6ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையின்படி, 5+3+3+4 என்ற கற்பித்தல் முறை வகுக்கப்பட்டு இருக்கின்றது. அதன்படி, அங்கன்வாடி, பாலவாடிகா மற்றும் 3 ஆண்டுகள் முன்பள்ளிக் கல்வி ஆகியவை, 3 முதல் 6 வயது வரையிலும், 1,2 ஆம் வகுப்புகள் இரண்டு ஆண்டுகளும் என வகுக்கப்பட்டு இருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு, குழந்தைகளுக்கான கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி உரிமை வழங்கப்பட்டு இருக்கின்றது. கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. நாட்டில் பெரும்பாலான பள்ளிகள், மாநில அரசுகள், மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகளின் அதிகாரத்தில் உள்ளன. எனவே, முதலாம் வகுப்பு சேர்க்கைக்கான வயது வரம்பை உயர்த்துவது குறித்து, மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசின் நேரடி ஆட்சிப்பகுதி அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டது.

அவற்றுள் 14 அரசுகள், வயது வரம்பு 5 ஆக இருக்க வேண்டும் என்றும், 22 அரசுகள் வயது வரம்பு 6ஆக இருக்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்து உள்ளன. இந்த ஒழுங்கு இன்மை, பதிவு செய்தல் பற்றிய தவறான அறிக்கைகளால் விளைகின்றது. இதனால், வெவ்வேறு மாநிலங்களில் நிகர சேர்க்கை விகிதம் பாதிக்கப்படுகின்றது. அதன்பின்னர், தேசிய அளவில் நடைபெறுகின்ற போட்டித் தேர்வுகளிலும், இந்த சிரமங்கள் எதிரொலிக்கின்றன. 2020 புதிய கல்விக்கொள்கை, 2009 குழந்தைகள் கல்வி உரிமைச்சட்ட விதிகளின் பார்வையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் நேரடி ஆட்சிப்பகுதிகள், மார்ச் மற்றும் அக்டோபர் சேர்க்கை நாள்களில், முதலாம் வகுப்பில் சேருவதற்கான வயது வரம்பை, நாடு முழுமையும் ஒன்றுபோல, 6ஆக ஆக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேள்வி 4 க்கு விளக்கம். இந்தப் பிரச்சினை, நீதிமன்றத்தின் ஆய்வில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.