ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தை மக்களவையில் எழுப்பிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்து பாஜகவை திணறடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மக்களவையில் பேசிய அவர்,  ரஃபேல் விவகாரத்தில் முதலாவது எப்படி ஒப்பந்தம் போடப்பட்டது? விலை எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது?, யாருக்கு ஆதரவானது என்கிற கேள்விகளை பிரதமரிடம் நாங்கள் கேட்டு வருகிறோம். 126 போர் விமானங்களுக்கு பதிலாக 36 போர் விமானங்களை வாங்குவதற்கு ஏன் முடிவு செய்யப்பட்டது? இந்திய விமானப்படை எங்களுக்கு 36 விமானங்கள் மட்டும் போதும் என்று தெரிவித்ததா? எங்களுக்கு உடனடியாக விமானம் தேவை என்பதால் 36 விமானங்கள் மட்டும் போதும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு அவசரம் என்றால், இதுவரை இந்திய மண்ணில் ஒரு ரபேல் விமானம் கூட வந்து சேரவில்லையே ஏன்?

ரபேல் ஒப்பந்தத்தில் பல்வேறு ஓட்டைகள் உள்ளன. கடந்த முறை நான் ரபேல் விமானம் குறித்து லோக்சபாவில் பேசிய நாளில், பிரதமர் நரேந்திர மோடி ஒன்றரை மணி நேரம் பதிலளித்தார். ஆனால் அதில் ஐந்து நிமிடம்தான் ரபேல் தொடர்பாக பேசினார். இன்று மோடி லோக்சபாவுக்கு வராமல் தனது அறைக்குள்  ஒளிந்துகொண்டுள்ளாரே ஏன்?

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர், இந்த ஒப்பந்தம் குறித்து ஏதும் தெரியாது என்கிறார். 2-வது விலை ரஃபேல் விமானத்தில் விலை ஏன் ரூ.536 கோடியில் இருந்து ரூ.1600யாக உயர்ந்தது. புதிய விலைக்குப் பாதுகாப்பு துறை அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது உண்மையில்லையா? 

ரபேல் ஒப்பந்தம் பைசாவுக்காகவா அல்லது யாருக்கேனும் ஆதரவு அளிக்கவா?. இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனம் பல ஆண்டுகளாக விமானங்களைத் தயாரித்து வருகிறது. ஏராளமான அனுபவம் இருக்கிறது. ஆனால், அனில் அம்பானி தோல்வி அடைந்த, நஷ்டமடைந்த தொழிலதிபர். ஏன் பிரதமர் மோடி தனது அன்பு நண்பருக்கு ஒப்பந்தத்தை அதிகமான விலையில் அளிக்கிறார்?’’ என அவர் கேட்டு பாஜகவை அதிர வைத்துள்ளார்.