மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், ஜெயக்குமார் ஆகியோர், தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி கடந்த 2012ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான வழக்குகள், வரும் 30ம் தேதி பட்டியல் இடப்பட்டுள்ளதால், இந்த வழக்கையும் அந்த தேதிக்கு ஒத்திவைக்கும்படி தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டது. 

அப்போது, இந்த வழக்கில் அரசு முடிவு எடுத்த பின்பும் ஏன் தாமதம் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உடனே, ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கை வரும் 30ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 7 பேர் விடுதலை விவகாரம் குறித்து அரசு முடிவெடுத்த பின்னரும் ஏன் தாமதம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.