திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அவருடைய தாத்தா போட்டியிட்ட வென்ற சைதாப்பேட்டை, துறைமுகம், சேப்பாக்கம் அல்லது திருவாரூர் ஆகிய தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடுவாரா அல்லது அவருடைய தந்தை போட்டியிட்டு வென்று ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது உறுதியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் பலரும் விருப்ப மனு தாக்கல் செய்திருந்த நிலையில், உதயநிதியே இன்று சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தார். எனவே, உதயநிதி ஸ்டாலின் அவருடைய தாத்தா போட்டியிட்டு 3 முறை வென்ற சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவது குறித்து பொதுச்செயலாளர் முடிவு செய்வார்.  சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதி திமுக செயளாலர்கள், மாவட்டச் செயலாளர் இத்தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். எளிதில் வெற்றி பெறலாம் எனத் தெரிவித்தனர். அதனால்தான், இத்தொகுதியில் போட்டியிட முடிவு செய்தேன்.” என்று தெரிவித்தார்.  இத்தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுவதாக தொடர்பாக செய்தியாளர்கள் உதயநிதியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “எனக்கு இன்னும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. வாய்ப்பு கொடுத்த பிறகு அதைப் பற்றி பேசுவோம்” என்று தெரிவித்தார்.