why central government stand against tamilnadu in kaveri issue said seeman
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. தமிழகத்திற்கு திறந்துவேண்டிய நீரை கர்நாடகா முழுமையாக திறந்துவிடுவதில்லை. இந்த விவகாரத்திற்கு இன்னும் தீர்வு எட்டப்பட்ட பாடில்லை. தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கியையே தமிழக விவசாயிகள் விட்டுவிடும் அளவிற்கு இந்த விவகாரம் உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசும் எதிர்க்கட்சிகளும் விவசாயிகளும் பல காலங்களாக முன்வைத்து வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்த மத்திய அரசு தயாராக இல்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், அது கர்நாடகாவில் பாஜகவிற்கு பின்னடைவாக அமையும். இதை வைத்து அரசியல் செய்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்பதால்தான், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய பாஜக அரசு தயங்குவதாக தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இதே நிலைப்பாட்டைத்தான் காங்கிரஸும் பின்பற்றுகிறது. ஆக மொத்தத்தில், பாஜகவோ காங்கிரஸோ எந்த கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் கர்நாடகாவில் ஆட்சியமைப்பதை மனதில் கொண்டு எப்படியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கமாட்டார்கள் என்பதே தமிழக விவசாயிகளின் வேதனையாக இருக்கிறது.

தற்போது கூட தமிழகத்தில் காவிரி டெல்டா பாசன பயிர்களை காப்பதற்காக கர்நாடகாவில் இருந்து தமிழக அரசு தண்ணீர் கேட்டது. ஆனால், கர்நாடகாவுக்கே தண்ணீர் இல்லாத நிலையில், தமிழகத்திற்கு திறந்துவிட வாய்ப்பே இல்லை என அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துவிட்டார்.

அதுபோதாதென்று, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் அதே கருத்தை தெரிவித்துள்ளார். காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என வெளிப்படையாக தெரிவித்து தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் மூத்த தலைவரே இப்படி கூறியிருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை பாஜக எடுப்பதற்கான காரணம் என்ன என்பதை சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள சீமான், காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நீர் கிடைத்து விட்டால், தமிழக விவசாயிகள் வேளாண்மையை விடமாட்டார்கள்.

அப்புறம் எப்படி விவசாய நிலங்களை ஆக்கிரமித்து தொழிலதிபர்களுக்கு கொடுப்பது? மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எல்லாம் செயல்படுத்துவது? விவசாயிகளை விவசாயத்தை விடவைத்தால் மட்டும்தான் இதை எல்லாம் செய்ய முடியும்.. அதனால்தான் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்கிறது என சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
