பெரிய பெரிய கொள்கை முடிவுகளை இந்திய அளவில் எளிதாக எடுக்கும் மத்திய பாஜக தலைவர்களால், தமிழக பாஜக தலைவராக யாரை நியமிப்பது என்கிற முடிவை மட்டும் சடுதியில் தீர்மானிக்க இயலவில்லை.

கடந்த, 17ம் தேதி, தமிழக பா.ஜ.க தலைவராக, நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக  நாமக்கல், பா.ஜ.க நிர்வாகி ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். அதைப் பார்த்த பா.ஜ.க,வினர் அது உண்மையா என ஆளாளுக்கு போன் போட்டு விசாரித்துக் கொண்டு இருந்தார்கள். நடிகர் எஸ்.வி.சேகர் தன் டுவிட்டர் பக்கத்தில் எச்.ராஜா தான், மாநில தலைவர் என பதிவு போட்டார். உடனே தேசிய இளைஞரணி துணைத் தலைவர் முருகானந்தம், மாநில துணை தலைவர் குப்புராம் பெயர்களை, அவர்களது ஆதரவாளர்களும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து காமெடியாக்கி விட்டார்கள். 

அதன் பிறகே விழித்துக் கொண்ட பாஜக தலைமை இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடவில்லை என தெரிவித்தது. காலாகாலத்தில் தலைவரை அறிவித்து இருந்தால் இப்படி அக்கப்போர் நடக்குமா? என தலையிலடித்துக் கொள்கிறார்கள் தாமரை மணாளன்கள்.