என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.

 

ரஜினி வெளியிட்டுள்ளதாக வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி பரவி வந்தது. அதில் ரஜினி ’’எனக்கு ஏற்கனவே இரண்டு முறை சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா உள்ள நிலையில் கட்சி தொடங்குதல், பொதுக்கூட்டம் என சென்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது எனக்கு மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்ததால் என்னால் எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை. நான் என்னுடைய உயிருக்காக பயப்படவில்லை. கட்சி தொடங்கி சில நாட்களிலேயே எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் அது கட்சி பணியை பாதிக்கும் என்பதாலேயே அமைதி காக்கிறேன்’’ எனக் கூறியதாக வாட்ஸ் அப்பில் வெளியானது. 

 

அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள ரஜினிகாந்த், ‘’என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிப்பேன்’’எனத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதம் என்னுடையதல்ல. அதில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் தனக்கு பொருந்தும் என்கிற ரீதியில் அவரது விளக்கம் இருக்கிறது. இந்தக் கடிதத்தில் விரைவில் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவேன் என அவர் கூறவே இல்லை. மாறாக தனது உடல் நிலை குறித்த கவலை இருப்பதால் ரஜினி மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து  அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் எனக்கூறி இருக்கிறார். அப்படியானால், அரசியலுக்கு வருவதா? வேண்டாமா? என்கிற முடிவையே அவர் இன்னும் எடுக்கவில்லை என்பது தெளிவாகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அவர் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை அவரளித்துள்ள விளக்கம் உறுதியாக உணர்த்துகிறது.

’அண்ணாத்த..’ தியேட்டருக்கு வருவாரு... ஆனால், அரசியலுக்கு வரமாட்டாரு... கெட்டபய சார் இந்த காளி..!