ஆட்சியில் அமைச்சராக இருந்த 13 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அதை மறைப்பதற்காக, வேண்டுமென்றே திட்டமிட்டு வீண் பழி சுமத்தி வருகிறார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

ஈரோடு மாவட்டத்தில் 2வது நாளாக இன்று முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்;- எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற இருபெரும் தலைவர்கள் நாட்டுக்காக, பிறந்து சேவை செய்தனர். அவர்கள் வழியில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியின் மீது குறைகூறும் வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் தினமும் பொய் அறிக்கை வெளியிட்டு வருகிறார். இந்த தேர்தல் மூலம் அவரை நிராகரித்து அதிமுக வெற்றிக்கொடி நாட்ட வேண்டும்.

திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவது அத்தனையும் பொய். இம்மியளவும் கூட உண்மை இல்லை. அவர்கள் ஆட்சியில் அமைச்சராக இருந்த 13 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அதை மறைப்பதற்காக, வேண்டுமென்றே திட்டமிட்டு, ஆட்சி மீதும், அமைச்சர்கள் மீதும் வீண் பழி சுமத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் நீதிமன்றத்திற்கு செல்லும் போது பாதிப்பு ஏற்படும் என்பதற்காக, திட்டமிட்டு, அரசியல் சூழ்ச்சி செய்து, அரசியல் நாடகத்தை ஸ்டாலின் அரங்கேற்றி வருகிறார்.

அதிமுக ஆலமரம் போன்றது. மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களைக் கொடுக்கும் கட்சி அதிமுக. தமிழகத்தில் 2,000 மினி கிளினிக் தொடங்கி சாதனை தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. இத்திட்டத்தை நாடே போற்றுகிறது. ஆனால், ஸ்டாலின் மட்டும் குறை கண்டுபிடிக்கிறார். எதிர்கட்சித் தலைவர் எதைத்தொட்டாலும் சந்தேகப் பேர்வழியாக இருக்கிறார். அதிமுக அரசைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு பேணி காப்பதில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. யார் தவறு செய்தாலும், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் அரசாக எங்கள் அரசு விளங்குகிறது. திமுக ஆட்சியில் கட்சிக்காரர்கள் தவறு செய்தால் அவர்களைக் காப்பாற்ற முயற்சிப்பார்கள். சட்டத்திற்கு எதிராக நடப்பார்கள். அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது.

சிறுபான்மை மக்களாக இருந்தாலும் பெரும்பான்மை மக்களாக இருந்தாலும் மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த அரசு பாதுகாப்பு வழக்கும். எந்த மாற்றமும் கிடையாது. சாதிச்சண்டை, மதச்சண்டை கிடையாது. அமைதிப்பூங்காவாக தமிழகம் விளங்குறது. தமிழகத்தில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர். மற்ற மதத்தினரோடு அண்ணன் - தம்பிகளாக பழகி வருகின்றனர் என முதல்வர் தெரிவித்துள்ளார்.