தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 12 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல உள்ள நிலையில், அவருடைய பொறுப்புகள் யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 28-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதிவரை இங்கிலாந்து, அமெரிக்காவில் அரசுமுறை சுற்றுப்பயணம் செல்கிறார். மீண்டும் செப்டம்பர் 9ம் தேதி அன்றுதான் அவர் சென்னை திரும்ப உள்ளார். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்வதாக கூறப்பட்டுள்ளது. அவருடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி. சம்பத், உதயகுமார், ராஜேந்திரபாலாஜி ஆகியோரும் செல்ல இருக்கிறார்கள். 
12 நாட்கள் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டில் உள்ள நிலையில், அவருடைய பொறுப்புகளை அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்களிடம் ஒப்படைத்து செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக முதல்வர்கள் வெளிநாடு செல்லும்போது மூத்த அமைச்சர்களிடம் ஒப்படைப்பதுதான் வழக்கம். அந்த வகையில் துணை முதல்வராக இருக்கக்கூடிய ஓபிஎஸ்ஸிடம் பொறுப்புகளை எடப்பாடி பழனிச்சாமி ஒப்படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அவரிடம் ஒப்படைக்கமாட்டார் என்று தலைமை செயலக வட்டாரங்கள் அதிரடிக்கின்றன.

 
மாறாக, எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமான வேலுமணியிடம் துறைகளை ஒப்படைத்துவிட்டு செல்வார் என்று தலைமை செயலகத்தில் தகவல்கள் அடிபடுகின்றன. இதற்கு மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்திலிருந்து அனுமதி கிடைத்துவிட்டதாகவும் தகவல்கள் றெக்கைக் கட்டிப் பறக்கின்றன. பல சந்தர்ப்பங்களில் வேலுமணியும் தங்கமணியும் எடப்பாடி பழனிச்சாமிக்கு நம்பிக்கை உரியவர்களாக இருந்துவருவதால், எடப்பாடி பழனிச்சாமி இவர்களில் ஒருவரான வேலுமணியிடம் பொறுப்புகளை வழங்கிவிட்டு செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


முதல்வர் ஆகஸ்ட் 28-ம் தேதி வெளிநாட்டு சுற்றுப்பயணம் கிளம்பும்போது, தற்காலிகமாகப் பொறுப்புகள் ஒப்படைப்பது பற்றி ஆளுநர் மாளிகையிலிருந்து அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்கிறார்கள் தலைமை செயலக வட்டாரங்களில்.