பல ஆண்டுகளாக கே. என். நேருவின் தீவிர ஆதரவாளரான அன்பழகனுக்கு மேயர் பதவியை வாங்கி தர வேண்டும் என்பதில் கே.என். நேரு உறுதியாக இருக்கிறார். ஆனால், மு.க. ஸ்டாலின், உதயநிதியிடம் உள்ள நெருக்கத்தால், மதிவாணனுக்கு மேயர் பதவியை அன்பில் மகேஷ் வாங்கி தருவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மாநகராட்சித் தேர்தலில் மேயர் பதவியைக் கைப்பற்றப்போவது கே.என். நேரு ஆதரவாளரா அல்லது அன்பில் மகேஷின் ஆதரவாளரா என்று கேள்வி திருச்சி திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.
திருச்சி மாநகராட்சித் தேர்தல் ஒரு புறம் இருந்தாலும், மேயர் பதவியைக் கைப்பற்றும் நோக்கில் திமுகவினர் காய் நகர்த்தி வ்ருவதுதான் பேசு பொருளாகியிருக்கிறது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களான கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதரவாளர்கள் இடையேதான் இந்தப் போட்டி ஏற்பட்டிருக்கிறது. அண்மையில் மேயர் பதவி குறித்து பேசிய கே.என். நேரு, “திருச்சி மாநகர் 27-வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அன்பழகன் வெற்றிப் பெற்று திருச்சி மாநகர மேயராக வர வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கேட்டு உள்ளோம். அதை செய்து தருவார் என நம்புகிறோம்” என்று பேசியிருந்தார்.

இதற்கிடையே திருவெறும்பூர் தொகுதியை அன்பில் மகேஷுக்காக விட்டுக்கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ. கே.என் சேகரன். மேயர் பதவியைக் கைப்பற்றும் நோக்கில், மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்திருந்தார். “உங்களுக்காக விட்டுக்கொடுத்திருக்கிறேன். எனவே. மேயர் பதவியை பெற்று தாருங்கள்” என்று நேரடியாகவே கே.என். சேகரன், அன்பில் மகேஷிடம் கேட்டிருந்தாராம். ஆனால், கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிய கே.என். சேகரன், தன்னுடைய மகனை களமிறக்கி, ஒதுங்கிக் கொண்டார். ஆனால் மகேஷின் இன்னொரு ஆதரவாளரான மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன், மேயர் பதவியைக் குறி வைத்து அன்பில் மகேஷைச் சுற்றி வருவதாக சொல்கிறார்கள்.

அன்பில் மகேஷ் மாவட்டச் செயலாளரானதும் அவருக்காக அலுவலகம் திறந்தது முதல் எல்லா பணிகளையும் செய்து வருகிறார் மதிவாணன். மு. அன்பழகன் இரு முறை துணை மேயராக இருந்தவர். காங்கிரஸ் கட்சிக்கு மேயர் பதவியை விட்டுக் கொடுத்ததால், துணை மேயராக மட்டுமே அவரால் இருக்க முடிந்தது. மேலும் 2014 திருச்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பல ஆண்டுகளாக கே. என். நேருவின் தீவிர ஆதரவாளரான அன்பழகனுக்கு மேயர் பதவியை வாங்கி தர வேண்டும் என்பதில் கே.என். நேரு உறுதியாக இருக்கிறார். ஆனால், மு.க. ஸ்டாலின், உதயநிதியிடம் உள்ள நெருக்கத்தால், மதிவாணனுக்கு மேயர் பதவியை அன்பில் மகேஷ் வாங்கி தருவார் என்று ஒரு தரப்பும் இந்த விவகாரத்தில் பவர்புல் மினிஸ்டரான கே.என். நேருவே சாதிப்பார் என்று இன்னொரு தரப்பும் எதிர்பார்ப்பில் உள்ளது. பிப்ரவரி 19-க்குப் பிறகு மேயர் பதவி யாருக்கு என்பது தெரிந்துவிடப் போகிறது.
