வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையில் ஓர் அணியும், அதிமுக தரப்பில் ஓர் அணியும் முடிவாகியுள்ளது.

அதிமுக நேற்று பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிளுடன் கூட்டணி என்பதை அதிகாரப்பூர்மாக அறிவித்தது. அந்த கூட்டணியில் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் இடம் பெறலாம் எனத் தெரிகிறது.

இந்நிலையில் இன்று திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு செய்யப்பட்டது. அந்த கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனிடையே திமுக கூட்டணியில் வேறு எந்தெந்த கட்சிகள் உள்ளன என்பது குறித்து பல வதந்திகள் நிலவி வந்தன.

குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கூட்டணியில் இடமில்லை என்றும் அதற்குப் பதிலாக பாமக இடம் பெறப் போவதாகவும் பேசப்பட்டது. ஆனால் பாமக நேற்று அதிமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டதால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் இடம் உண்டா என ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்,

அப்போது பேசிய ஸ்டாலின், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிமுக மற்றும பாஜக கட்சிகளுக்கு எதிராக திமுகவுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என அவர் விளக்கம் அளித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மதிமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடது சாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம்  லீக், மனித  நேய மக்கள் கட்சி  போன்ற கட்சிகள் தான் திமுகவுடன் இணைந்து பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டன. எனவே இந்தக் கட்சிகள் கூட்டணியில் இடம் பெறலாம் என தெரிகிறது.