மே 30 அன்று பதவியேற்க உள்ள நரேந்திர மோடி அமைச்சரவையில் யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி கிடைக்கும் என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களைக் கைப்பற்றியது. நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மே 30 அன்று பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். அவரோடு சேர்ந்து யாரெல்லாம் அமைச்சர் ஆவார்கள் என்ற பரபரப்பு டெல்லி அரசியலில் மையம் கொண்டுள்ளது. ஏற்கனவே அமைச்சராக இருந்தவர்களில் யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி கிடைக்கும் யாரெல்லாம் கழற்றிவிடப்படுவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
நிதி அமைச்சராக இருக்கும் அருண்ஜெட்லியின் உடல்நிலை சீராக இல்லை. எனவே அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அவர் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்று மோடி விரும்புவதாகவும் கூறப்படுகிறது.  பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மத்திய அமைச்சராவார் என்று கூறப்படுகிறது. அவர் அமைச்சராக முடிவெடுப்பதை அவரிடமே மோடி விட்டுவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், நரேந்திரசிங் தோமர், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இராணி ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பீகாரில் பாஜக கூட்டணியில் இடம் பிடித்துள்ள ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 எம்.பி.க்கள் உள்ளனர். தனக்கு பதில் தன்னுடைய மகன் சிராக் பஸ்வானுக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கும்படி பஸ்வான் கோரியுள்ளதாக தெரிகிறது. இன்னொரு கூட்டணி கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்துக்கு ஒரு கேபினட், ஒரு இணை அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஓரிடமும் கிடைக்கவில்லை என்றாலும், அதிமுக ஒரு அமைச்சர் பதவியை வழங்க பாஜக முன்வரும் என்ற தகவலும் டெல்லியில் உலா வருகின்றன. மேலும் இந்தமுறை பாஜக புதிதாக கால் பதித்த மாநிலங்களில் சிறப்புக் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. அதற்கேற்ப அமைச்சர் பதவிகளை அந்த மாநிலங்களுக்கு வழங்கவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி மேற்கு வங்காளம், தெலங்கானாவில் குறிப்பிடத்தக்க இடங்களில் வென்ற பாஜகவினருக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்க பாஜக முடிவு செய்துள்ளது.