தமிழக சட்டப்பேரவை தலைவர், துணைத் தலைவர் யார்..? திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அப்பாவு, பிச்சாண்டி முறையே போட்டியிடுவார்கள் என திமுக அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு அப்பாவும், துணைத் தலைவர் பதவிக்கு கு.பிச்சாண்டியும் முன்னிறுத்தப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருகிற 12-5-2021 அன்று நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில், திமுக சார்பில் பேரவைத் தலைவராக திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.அப்பாவும், துணைத் தலைவராக திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கு.பிச்சாண்டியும் போட்டியிடுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் மே 11 காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில், தேர்தலில் வெற்றிபெற்ற புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக் கொள்கிறார்கள். இவர்களுக்குத் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். இந்நிலையில் மே 12 அன்று சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தலுக்கு மனுத்தாக்கல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பேரவைத் தலைவர் பதவிக்கு மு.அப்பாவு, துணைத் தலைவர் பதவிக்கு கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.