முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்து 10 மாத காலம் ஆகியுள்ள நிலையில் சிறந்த அமைச்சர் யார் என்ற தகவலை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
திமுகவின் 10 மாத கால ஆட்சி
கடந்த 2011 ஆம் ஆண்டு ஆட்சியை இழந்த திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க 10 வருடங்கள் ஆகியுள்ளது. இந்த 10 வருட காலத்தில் மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. இதன் காரணமாக திமுக மீது மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை காரணமாக மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமரவைத்துள்ளது. திமுக அரசு பதவியேற்றுள்ள 10 மாதங்களில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. பதவியேற்ற நாள் முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக முழுவதும் பல முறை சுற்றுப்பயணம் செய்து மக்கள் நல திட்டங்களை துவக்கிவைத்தும், அடிக்கல் நாட்டியுள்ளார். முதலமைச்சரின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் அவரது கீழ் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையின் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறது. மக்களுக்கு பிரச்சனை என்றால் உடனடியாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்க்கப்பட்டும் வருகிறது.

நம்பர் ஒன் முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பொதுப்பணிதுறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் என அனைத்து துறை அமைச்சர்களும் தங்களது திறமையான செயல்பாட்டால் மக்கள் பணிகளை திறம்பட ஆற்றி வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியல் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், கடந்த 10 மாத கால ஆட்சியில் தமிழக அரசின் செயல்பாடு நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளதாக கூறினார். நாட்டிலேயே நம்பன் ஒன் முதலமைச்சராக தமிழக முதலமைச்சர் உள்ளதாக தெரிவித்தார்.

நம்பர் ஒன் அமைச்சர் சேகர்பாபு
நம்பர் ஒன் முதலமைச்சரின் கீழ் செயல்படும் அமைச்சரவையில் நம்பர் ஒன் அமைச்சராக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இருப்பதாக கூறினார். இதனை மேடை பேச்சுக்காக கூறவில்லையென்று தெரிவித்த உதயநிதி, தன் மனதார கூறுவதாக தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் இந்து விரோத அரசாக இருக்கும் என சிலர் விமர்சித்த நிலையில், அதனை அமைச்சர் சேகர்பாபு மாற்றி அனைவருக்குமான அரசாக மாற்றியுள்ளதாக கூறினார்.சேகர்பாபு எப்போது தூங்குகிறார் என்று தெரியாத நிலைதான் இருப்பதாக கூறிய உதயநிதி, தன்னை போல் இன்னொருவரை சேகர்பாபு வைத்துள்ளாரா என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்தார். அந்தளவிற்கு சேகர்பாபுவின் உழைப்பு உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் பாராட்டி பேசினார்.
