மறைந்த திமுக எம்எல்ஏ ஜென் அன்பழகன் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்தாலும் அவரை திமுகவின் தென் சென்னை மாவட்ட தளபதியாகவே கட்சித் தலைமை பார்த்து வந்தது.

ஒரு காலத்தில் சென்னை திமுக வட சென்னை மற்றும் தென் சென்னை என இரண்டு மாவட்டங்களாக மட்டுமே திமுகவில் பிரிக்கப்பட்டு இருந்தது. அப்போது தென் சென்னை மாவட்ட திமுக செயலாளராக கோலோச்சியவர் அன்பழகன். திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் எம்எல்ஏ தேர்தலில் தோல்வி அடையும் சென்டிமென்ட் உடையவர் அன்பழகன் என்று ஒரு பேச்சு உண்டு. உதாரணத்திற்கு திமுக ஆட்சிக்கு வந்த 2006 தேர்தலில் தியாகராயநகரில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் அன்பழகன்.

அதே சமயம் ஒட்டு மொத்தமாக சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக தோற்ற போது சேப்பாக்கத்தில் வென்று எதிர்கட்சி எம்எல்ஏவாக இருந்தவர் அன்பழகன். இப்படி சென்டிமென்ட் இருந்த போதிலும் கட்சியை பொறுத்தவரை தென் சென்னையின் தளபதி அன்பழகன் தான். இதற்கு காரணம் அவரது அதிரடி அரசியல் தான். தலைமை சொல்லும் வார்த்தையை தட்டாமல் சிந்தாமல் சிதறாமல் செய்யக்கூடியவர். தலைமை சொல்லிவிட்டது என்பதற்காக கட்சிக்கு பாதகமான ஒரு செயல் என்றால் அதனை தலைமையிடம் கூறி சரி செய்யக்கூடியவர்.

இது எல்லாவற்றையும் விட சென்னையின் வர்த்தக கேந்திரமாக விளங்கும் தியாகராயநகர் பகுதி அப்போது தென் சென்னையிலும் தற்போது அன்பழகன் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்த மேற்கு சென்னையின் கட்டுப்பாட்டிலும் வருகிறது. இதனால் தான் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால் திமுகவிற்கு மட்டும் அல்லாமல் மேற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பாளராக அல்லது செயலாளராக வரப்போகிறவருக்கு அரசியல் ரீதியில் தியாகராயநகர் முக்கியத்துவம் வாய்ந்தது.

தென் சென்னையில் அன்பழகனுக்கு கடும் போட்டியாளராக திகழ்ந்தவர் கலைராஜன். 2006ம் ஆண்டு தேர்தலில் அன்பழகனை தியாகராயநகரில் தோற்கடித்து தனது செல்வாக்கை நிருபீத்தவர் கலைராஜன். சென்னையில் திமுகவிற்கு அன்பழகன் எப்படியோ, அதே போல் அதிமுகவிற்கு அன்பழகன். கட்சித் தலைமையின் அதிருப்தி காரணமாக 2011 தேர்தலில் போட்டியிட கலைராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால் மாவட்டச் செயலாளர் பதவி அவரிடம் பறிக்கப்படவில்லை. இதன் மூலமே கலைராஜன் தென் சென்னையில் எவ்வளவு முக்கியமானவர் என்பது தெரிந்துவிடும்.

ஆனால் அதிமுக இரண்டாக உடைந்த போது சசிகலாவிற்கு விசுவாசம் காட்டியதால் மாவட்டச் செயலாளர் பதவியை இழந்து தற்போது திமுகவில் ஐக்கியமாகியுள்ளார். ஆனாலும் கூட ஆக்டிவ் அரசியல் செய்ய முடியாமல் கலைராஜன் தவித்து வந்தார். காரணம் தென் சென்னை அன்பழகன் கோட்டையாக இருந்தது. இதனால் அந்த பகுதியில் அவரை மீறி கலைராஜன் செயல்பட முடியவில்லை. ஆனால் தற்போது அவரது மறைவிற்கு பிறகு திமுகவிற்கு அங்கு ஒரு செயல்வீரர் தேவை. சென்னை மேற்கு மாவட்ட திமுகவிற்கு தற்போதே பொறுப்பாளராக சிலர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களில் மிக முக்கியமானவர் மறைந்த அன்பழகனின் சகோதரர் கருணாநிதி மற்றும் அன்பழகனின் மகன் ராஜா. இவர்கள் இரண்டு பேருக்குமே மேற்கு சென்னை மாவட்டச் செயலாளர் ஆகும் ஆசை உள்ளது. அவர்களின் செயல்கள் மூலம் இதனை கட்சித் தலைமை உணர்ந்துள்ளது. ஆனால் மேற்கு சென்னை எனும் முக்கிய பதவிக்கு அன்பழகன் போன்ற ஒரு செயல் வீரர் ஆளுமை தேவை. இதனை பயன்படுத்திக் கொள்ள கலைராஜன் முயற்சிப்பார் என்கிறார்கள். அதிலும் கலைராஜன், கரூர் செந்தில்பாலாஜி மூலமாக திமுகவில் இணைந்தவர். எனவே அந்த லாபி மூலம் கட்சித் தலைமையை திருப்திபடுத்தி மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை கைப்பற்ற கலைராஜன் முயற்சிக்கலாம் என்கிறார்கள். திமுகவை பொறுத்தவரை சென்னையில் அதிமுகவில் இருந்து வந்த சேகர் பாபு மிக முக்கியமான நபராக வலம் வருகிறார்.

எனவே மாற்று கட்சிக்காரர் என்றெல்லாம் கலைராஜனை ஒதுக்க முடியாது என்கிறார்கள். இருந்த போது அன்பழகன் குடும்பத்தை சேர்ந்த அவரது மகன் ராஜா மற்றும் தம்பி கருணாநிதிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்று கூறி கலைராஜனை மாவட்டச் செயலாளர் ஆக்கவே ஸ்டாலின் விரும்புவார் என்று பேச்சு அடிபடுகிறது.