தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளம், தமிழகம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற்றால், யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து ஐ.ஏ.என்.எஸ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 154 - 162 தொகுதிகளில் வெல்லும் எனக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 58 - 66 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுக 1 - 5 தொகுதிகளிலும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 2 - 6 தொகுதிகளிலும் வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 41.4 சதவீத ஓட்டுகளையும், அதிமுக - பாஜக கூட்டணி 28.6 சதவீத ஓட்டுகளையும், மக்கள் நீதி மய்யம் 8.3 சதவீத வாக்குகளையும், அமமுக 6.9 சதவீத வாக்குகளையும் பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
