சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தெரிவித்தவர்களுக்கு நேற்று நேர்காணல் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்பாளர் தேர்வு தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.  தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் கடந்த 3 ஆம் தேதி வரை விருப்பமனுக்களை வழங்கலாம் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது. 

 8240 விருப்பமனுக்கள் பெறப்பட்டிருந்த நிலையில் விருப்பமனுக்களை வழங்கியவர்களிடம் மாவட்ட வாரியாக பிரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் அடங்கிய ஆட்சிமன்ற குழு முற்பகல், பிற்பகல் என இரண்டு கட்டங்களாக நேர்காணலை நடத்தி முடித்துள்ளது. இந்த நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் மாவட்டச் செயலாளர்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

தங்கள் மாவட்டத்திற்குள் உள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அதிமுக தலைமையிடம் வழங்கி உள்ளனர். அதனை பரிசீலித்து வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள வேட்பாளரை அதிமுக தலைமை தேர்வு செய்ய உள்ளது. இது மட்டுமல்லாமல் தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி மக்களிடம் வாக்குகள் சேகரிக்க வேண்டும், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர உழைக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுருத்தல்களும் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.