முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டல் படியும் அதிமுக செயல்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக யாரை முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கிறது என்பதில் அமைச்சர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. எம்.எல்.ஏக்க சேர்ந்து முதல்வரை தேர்ந்தெடுப்போம் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். ஒரே முதல்வர் எடப்பாடியார்தான் என ராஜேந்திர பாலாஜி சொல்ல அமைச்சர்கள் ஆளுக்கொரு எண்ணத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்.பி.உதயகுமார்;- அதிமுகவில் ஒரு தொண்டன் முதலமைச்சராக வரமுடியும் என்பது நிரூபணம். ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் செயலில் முதல்வரும், துணை முதல்வரும் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டல் படியும் அதிமுக செயல்படும். கருத்துகளை கட்சிகளுக்குள்  பேச வேண்டுமே தவிர பொதுவெளியில் பேசக்கூடாது என வேண்டுகோள் விடுத்தார். 

தமிழகத்தில் முதல்வர்களை முன்னிறுத்தியே தேர்தல் களம் காணப்படுகிறது. உள்ளாட்சி, இடைத்தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை முன்னிறுத்தியே வெற்றி பெற்றோம். அதிமுகவினர் ஒற்றுமையுடன் இருப்பதாலேயே மக்களிடம் வரவேற்பு கிடைத்தது. எளிமையின் அடையாளமாக முதல்வர் பழனிசாமியின் ஆட்சி அமைந்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 3 தேர்தல்களை சந்தித்துள்ளோம். அதேபோல,  எதிர்வரும் தேர்தல்களையும் எதிர்கொள்வோம் என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.