எங்கள் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு நடிகர் ரஜினியும், கமல்ஹாசனும் எங்கள் அணியில் இணைந்தால் வரவேற்போம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 2021 மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் சில மாதங்களே உள்ளன. தேர்தலையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பணிகளை தொடங்கியுள்ளன. இந்நிலையில், வருகிற சட்டமன்ற  தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பிரசாரம் செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதற்கு அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளை  தெரிவித்து வருகிறார்கள். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்கள் எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்று கூறினர். அதேநேரம் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் தேர்தல் முடிந்த பிறகுதான் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவித்தனர். இதனால், அதிமுகவில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி;- திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்தான். மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தித்தான் 2021 சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம். திமுக கூட்டணியில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டி என்பதை மு.க.ஸ்டாலின்- ராகுல்காந்தி அறிவிப்பர். எங்கள் கொள்கைகளை ஏற்றுக்கொண்டால் ரஜினியையும் கமலையும் எங்கள் அணியில்  இணைந்தால் வரவேற்போம். மதுரையை 2வது தலைநகராக அறிவித்தால் வரவேற்போம். தென் மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கு அது உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.