தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். தொடர்ந்து அதிமுகவை விமர்சித்து வரும் கமல்ஹாசன், தன்னை எம்.ஜி.ஆரின் நீட்சி என்றும் தெரிவித்தார். இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிமுகவினர் கமல்ஹாசனை தொடர்ந்து விமர்சித்துவருகிறார்கள். உச்சகட்டமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கமல்ஹாசனை மிக காட்டமாக விமர்சித்திருந்தார்.


“பிக்பாஸ் பார்த்தால் ஒரு குடும்பம் கூட நல்லா இருக்காது. நல்லா இருக்கிற குடும்பத்தைக் கெடுப்பதுதான் கமலுடைய வேலை. அந்தத் தொடரை எல்லோரும் கெட்டுபோய்விடுவார்கள். நல்லா இருக்கும் குடும்பமும் கெட்டுப்போய்விடும்" என்று மிகக் காட்டமாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது” நையாண்டியாக பதில் அளித்திருந்தார். 
இந்நிலையில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு தகவலைப் பதிவிட்டிருந்தார். அதில், “நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் 170 கோடிகளை வருமானவரித்துறை கைப்பற்றியது நினைவிருக்கலாம். ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? நான் கேட்பேன்” என்று கமல் பதிவிட்டிருந்தார்.