கோவை மேயர் பதவியை தட்டி தூக்கும் எ.வ வேலு ஆதரவாளர்...! மீனா ஜெயக்குமாரா , கார்த்தியா ? கடும் போட்டி....!
கோவை மேயராக திமுகவில் யார் போட்டியிடுவார் என்ற கேள்வி கோவை மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கோவையை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜியும், என்ன ஆனாலும் விட்டுத்தரக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் போட்டிபோட்டுக் கொண்டு களத்தில் இறங்கிவிட்டனர். அதிகாரம் மற்றும் பணத்தின் துணையுடன் இறங்கும் செந்தில் பாலாஜியை, வேலுமணியும் அதே அளவுக்கு நிகராக பணத்தினை இறக்கி வேலை செய்து வருகிறார். யார் கோவையை கைப்பற்றுவார்கள் என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, யார் கோவையின் மேயராக போட்டியிடுவார்கள் என்ற கேள்வி மற்றொரு பக்கம் எழுந்துள்ளது.
தற்போது நடந்து வரும் பணிகள், இருக்கும் ஓட்டுச்சாவடிகளுக்காக தயார் செய்யப்படும் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், மறைமுக தேர்தல் தான் நடக்கும் என்பது உறுதியாகி விட்டது. தங்களுக்கும் வசதி என்பதால் மறைமுக தேர்தல் நடத்தவே ஆளும் கட்சி தலைமையும் விரும்புகிறது. இதனால் மேயர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பை, எதிர்பார்த்து காத்திருந்த கோவை வி.ஐ.பிக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் மேயர் என்றால், எம்.பி, எம்.எல்.ஏவுக்கு இணையான மரியாதை இருக்கும். மறைமுக தேர்தல் என்றால், கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றாலே போதும். எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்கள், எம்.எல்.ஏ மற்றும் எம்.பி பதவிக்கு போட்டியிட்டவர்கள் அதற்கு விரும்ப மாட்டார்கள். 'ஒரு வேளை தோற்று விட்டால், மானம் மரியாதை மொத்தமாக கப்பலேறி விடும் என்ற பயமும் அவர்களுக்கு இருக்கும்' என்பது அரசியல் கட்சியினர் கருத்தாக உள்ளது.
அதிமுக சார்பில் மேயர் வேட்பாளராக நிற்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ள மற்றவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.அதில், ஆண் மேயராக இருந்தால் முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமியின் பெயரும், பெண் மேயராக இருந்தால், காளப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் செந்திலின் மனைவி கிருபாளினி பெயரும் பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக சார்பில் மீனா லோகு , மீனா ஜெயக்குமார் மற்றும் அதிமுக சார்பில் சோனாலி பிரதீப் ஆகியோர் மேயர் வேட்பாளர் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றனர் என்று ஏற்கனவே கூறியிருந்தோம்.
அதில் திமுக சார்பில் மீனா ஜெயக்குமார் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் அமைச்சர் எ.வ வேலுவின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக மாநில மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளராக இருக்கிறார் மீனா ஜெயக்குமார். எந்தவொரு தேர்தலிலும் இதுவரை போட்டியிடாத ‘மீனா ஜெயக்குமார்‘, நேரடியாக ‘மேயர்’ தேர்தலுக்கு போட்டியிடுகிறார்’ என்று கோவை மாவட்ட திமுக வட்டாரங்கள் கூறுகிறது.