மேயர் பதவியைக் கைப்பற்றுவதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு இடையே போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வடசென்னையைச்சேர்ந்த ஒருவருக்கு மேயர் பதவியைப் பெற வேண்டும் என்பதில் சேகர்பாபு உறுதியாக இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மாநகராட்சி மேயர் பதவியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகிய ஆதரவாளர்களில் யாருக்கு மேயர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு திமுகவில் ஏற்பட்டுள்ளது. 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை 200 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 101 வார்டுகளில் வெற்றி பெறும் கட்சி மேயர் பதவியைக் கைப்பற்றும். ஆளுங்கட்சியான திமுக, வெற்றி நிச்சயம் என்ற எண்ணத்தில் உள்ளது. அதையும் தாண்டி, மேயர் பதவி யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற ஆலோசனைகள் அறிவாலயத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. 1996, 2001-இல் மு.க. ஸ்டாலின், 2006-இல் மா.சுப்பிரமணியன், 2011-இல் சைதை துரைசாமி என மத்திய சென்னை, தென் சென்னையைச் சேர்ந்தவர்களே மேயர் பதவியை கடந்த 26 ஆண்டுகளில் அலங்கரித்திருக்கிறார்கள். 

இந்த முறை சென்னை மாநகராட்சி மேயர், பெண்களுக்கு ஒதுக்கியதோடு பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை மேயர் பதவியை பெறும் பட்டியலினப் பெண் யார் என்ற கேள்வியும் பெரிதாக எழுந்துள்ளது. திமுகவில் மகளிரணியைச் சேர்ந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் அதிகரித்திருக்கிறது. இதற்கிடையே மேயர் பதவியைக் கைப்பற்றுவதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு இடையே போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வடசென்னையைச்சேர்ந்த ஒருவருக்கு மேயர் பதவியைப் பெற வேண்டும் என்பதில் சேகர்பாபு உறுதியாக இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல தென் சென்னையைச் சேர்ந்த ஆதரவாளர்களுக்குப் பெறுவதில் மா.சுப்பிரமணியனும் ஆர்வம் காட்டி வருகிறார். 

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி சமாதியை தினந்தோறு அழகாக மலர்களால் அங்கரிக்கும் பொறுப்பை கடந்த 4 ஆண்டுகளாகவே சேகர்பாபுதான் பொறுப்பேற்று செய்து வருகிறார். இதில் சேகர்பாபுவுக்கு உதவியாக புழலைச் சேர்ந்த நாராயணன் உதவியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சேகர்பாபுவுக்கு நெருக்கமான நாராயணனின் மனைவி கவிதா மணலி மண்டலத்தில் 17-வது வார்டில் போட்டியிடுகிறார். அவருக்கு மேயர் பதவியை சேகர்பாபு வெற்று தருவார் என்ற பேச்சு அறிவாலயத்தில் உலா வருகிறது.

இதேபோல தென் சென்னை பகுதியில் ஆலந்தூர் மண்டலத்தில் 153-வது வார்டில் போட்டியிடும் அமுத பிரியா மேயராகலாம் என்றும் கூறப்படுகிறது. இவர், மா.சுப்பிரமணியத்தின் ஆதரவாளர். முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் போட்டியிடும் ஸ்ரீதரணிக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற பேச்சும் உள்ளது. இவர்களைத் தாண்டி மேலும் சிலர் இந்தப் போட்டிக்குள் வரலாம் என்றும் எதிர்பார்கப்படுகிறது. பிப்ரவரி 22 அன்று தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சென்னை மேயர் பதவி குறித்து ரேஸ் சூடுபிடிக்கும். இதில் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் இவர்களில் யாருடைய கை ஓங்கும் என்பது தெரிந்துவிடும்.