வரும் டிசம்பர் மாதம் 24ம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் அதிகார மாற்றம் ஏற்படுமா? என அதிமுக நிர்வாகிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சி அதிகாரம் இருப்பதால் பொதுக்குழு அந்த மாற்றம் நிச்சயம் நிகழாது. ஆகையால் அதிமுகவில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பதை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் ஓ.பி.எஸ். அதற்கு வரும் சட்டமன்றத் தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.

’’தமிகழத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் தென் மாவட்டங்களில் உள்ள 110 தொகுதிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். மீதமுள்ள வடக்கு மற்றும் மேற்கு சட்டமன்றத் தொகுதிகளை எடப்பாடி பார்த்துக் கொள்ளட்டும். எனது பொறுப்பில் உள்ள தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட எந்த விஷயத்திலும் எடப்பாடி பழனிசாமி தலையிடக்கூடாது. அதேபோல் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதி, வேட்பாளர் பட்டியலில் எனது தலையீடு நிச்சயம் இருக்காது.

கட்சியில் இருந்து தேர்தலுக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் நிதியை மட்டும் கொடுத்தால் போதும். மீதமுள்ள செலவுகளை எனது சொந்த பணத்தில் இருந்து செலவழித்துக் கொள்கிறேன். இந்த 110 தொகுதிகளில் நான் நிறுத்தும் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கிறேன். எடப்பாடி அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் வெற்றி பெற வைக்கட்டும்.

 

யார் அதிக தொகுதிகளை வென்று தருகிறார்களோ அவர்கள் கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகிக்கலாம். சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று முதல்வராவது ஒருபுறமிருக்கட்டும். என்னை விட ஒரு தொகுதி அதிகம் வென்றால் கூட நான் எடப்பாடிக்கு ஆதரவு தருகிறேன். இல்லையென்றால் அவர் ஒதுங்கிக் கொண்டு எனக்கு அதிமுக பொதுச்செயலாளர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டு’’என சபதம் விட்டு இருக்கிறாராம் ஓ.பி.எஸ். அந்த சபதத்தை எடப்பாடி தரப்பும் அரை மனதாக ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறுகிறார்கள்.  

இதில்கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் வெற்றியை அந்த சபதத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் கூறியிருக்கிறார் ஓ.பி.எஸ்.  அதாவது வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இடம்பெறும். அந்தக் கட்சிகள் தென்மாவட்டங்களில் அதிக சீட்டுக்களை கேட்க மாட்டார்கள். தேமுதிக, திருப்பரங்குன்றம், விருதுநகர் தொகுதிகளை மட்டுமே கேட்கும். மற்றபடி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, விழுப்புரம், வேலூர் ஆகிய பகுதிகளை மட்டுமே குறி வைக்கும். அதேபோல் பாமகவுக்கு தென்மாவட்டங்களில் செல்வாக்கு இல்லை. ஆகையால் தென்மாவட்டங்களில் ஒரு தொகுதியை கூட விரும்பாது. ஆக 110 தொகுதிகளை கழித்து மீதம் எடப்பாடி தரப்பில் ஒதுக்கப்படும் 134 தொகுதிகளில் எப்படியும் 50 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் நிலை உருவாகும்.

அதன்படியானால் எடப்பாடி தரப்புக்கு 80 சீட்டுக்கள் மட்டுமே மிஞ்சும். அப்படிப் பார்த்தால் அவர் வெற்றி பெற வைக்கும் தொகுதிகள் குறைவாகவே இருக்கும். இந்தக் கணக்குப்படி பார்த்தால் ஓ.பி.எஸ் அதிமுகவை முழுமையாக கைப்பற்றி பொதுச் செயலாளராகி விடுவார் என்கிறார்கள்.  ஆக மொத்தத்தில் அதிமுகவில் அதிரிபுதிரியான சம்பவங்கள் நிகழ இருக்கிறது.