Who ever loses is a resignation MLA post

ஒருவர் தோற்றாலும் அனைவரும் ராஜினாமா செய்வோம்.நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம் என தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

இன்று இன்று 1 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் 18 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கவுள்ளது. திமுக, தினகரன் அணி தரப்பினர் இந்த தீர்ப்பை எதிர்பார்த்து ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். ஆனால், இந்த தீர்ப்பை அதிமுக தரப்பு சற்று பதட்டத்துடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது. ஏனெனில், அதிமுகவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தீர்ப்பாக இது கருதப்படுகிறது.

இந்நிலையில் இதுபற்றி இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ “நிச்சயமாக எங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும். ஒருவேளை எங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் மற்றவர்கள் எப்படியோ, நான் நிச்சயம் மேல்முறையீடு செய்ய மாட்டேன். ஒரு வருடம் எம்.எல்.ஏ பதவி இல்லாமல் இருந்து விட்டோம். இதைவிட பெரிய தண்டனை தேவையில்லை. சட்டசபைக்கு சென்று எங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என ஆசைப்படுகிறோம். எனவே, தீர்ப்பு வெளியானவுடன் நாங்கள் அனைவருமே சட்டசபைக்கு செல்வோம்.

இப்போதும், நாங்கள் அனைவரும் அதிமுக உறுப்பினர்கள்தான். எங்களை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவில்லை. தீர்ப்பு ஒருவேளை எதிராக வந்தால் இடைத்தேர்தலை சந்திக்கவும் தயாராக உள்ளோம்.

எடப்பாடியை எதிர்த்து ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 பேர் வாக்களித்தார்கள். அவர்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும் போது, எந்த தவறும் செய்யாத எங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும். அதேபோல், இடைத்தேர்தலில் ஒருவர் தோற்றாலும் அனைவரும் ராஜினாமா செய்வோம்.நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம்.” என அவர் தெரிவித்தார்.