கண்ணகி சிலை இடிக்கப்பட்டது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் அதிமுக- திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

மெரினாவும் அரசியலும்

தமிழக அரசியல் நிகழ்வுகளும், சென்னை மெரீனா கடற்கரையும் பிரிக்க இயலாத ஒன்றாக மாறிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். கடந்த 1993- ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக சென்னை மெரினா கடற்கரையில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதே போல இலங்கை தமிழர் பிரச்சனைக்காக 2010 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இளைஞர்கள் மெரினா கடற்ரையில் போராட்டம் நடத்தி வந்தனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த கோரி முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா நினைவிடத்தில் தர்மயுத்தம் மேற்கொண்டார். இது போன்ற பல நிகழ்வுகளை கண்ட சென்னை மெரினா கடற்கரையில் தான் கண்ணகிக்கு சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 2001 ஆம் ஆண்டில் அகற்றப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு சர்ச்சைகள் அப்போது ஏற்பட்ட நிலையில் 2006 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற கருணாநிதி மீண்டும் அதே இடத்தில் கண்ணகி சிலையை வைத்தார்.

அதிமுக- திமுக மோதல்

இந்தநிலையில் தான் தமிழக சட்டபேரவையில் கண்ணகி சிலை தொடர்பாக அதிமுக- திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. தமிழக நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது பேசிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் , அதிமுக ஆட்சியில் மெரினா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலை காரணமில்லாமல் அகற்றப்பட்டதாக தெரிவித்தார். இதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். பின்னர் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் கண்ணகி சிலையை உடைத்து தள்ளிய அதிமுக என உறுப்பினர் பேசியதாகவும் அதனை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கண்ணகி சிலை லாரி மோதியது எப்படி?

இதற்கு பதிலளித்த பேசிய பொதுபணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் எந்த ஒரு தனிப்பட்ட இயக்கத்தையோ , தனிப்பட்ட நபரையோ குறிப்பிட்டு பேசாமல் பொதுவான கருத்தையே முன்வைத்தார் எனவே அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை என்றார். எனினும் அதிமுக ஆட்சியில் சிலை அகற்றப்பட்டதா இல்லையா என கேள்வி எழுப்பினார். இதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர் துரைமுருகன் கண்ணகி சிலை அகற்றறப்பட்ட நேரத்தில், லாரி இடித்து விழுந்துவிட்டதாக செய்தித்தாள்களில் செய்தி வெளியாகியது, உண்மை, சாலையை தாண்டி, நடைபாதையையும் தாண்டி எப்படி கண்ணகி சிலை மீது லாரி மோதியது என்பது எங்களுக்கும் தெரியும்,எனினும் கண்ணகி சிலை அகற்றப்பட்டது உண்மை என கூறி விவாதத்தை முடித்து வைத்தார்