Who can no longer open the Sterlite plant
கையில் உருட்டுக் கட்டைகள், பெட்ரோல் குண்டுகளுடன் வந்தவர்கள் என்ன பொதுமக்களா? ஸ்டாலினை சபையில் வைத்து கேள்விகளை கேட்டுள்ளார் எடப்பாடியார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை கடந்த மாதம் 28ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. ஆனால் அமைச்சரவையைக் கூட்டி அரசாணை வெளியிடும் வரை சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்க மாட்டோம் என்று திமுக அறிவித்திருந்த திமுக பல்வேறு தலைவர்களும் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து இன்று திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்தனர்.
பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுந்து, "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தாமிர உருக்காலைகள் தமிழகத்திற்கு வேண்டவே வேண்டாம் என்றும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 20 லட்சம் ரூபாயை 1கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்" என்று கோரிக்கையை முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்த அரசாணையை வெளியிடுவதற்கு முன்பு சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இனி யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முடியாது. ஆலைக்குக் கொடுத்த அனைத்து உரிமைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே மக்கள் மீண்டும் போராட வேண்டாம். ஆனால் மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடுவதற்கு எந்த தடையும் இல்லை. நாட்டிலேயே அதிக அளவில் போராட்டங்கள் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும், "ஸ்டெர்லைட் போராட்டத்தில் கையில் உருட்டுக் கட்டைகள், பெட்ரோல் குண்டுகளுடன் வந்தவர்கள் என்ன பொதுமக்களா" என்று கேள்வியெழுப்பிய அவர், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
