நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு தேர்தல் தள்ளி போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் தீர்ப்பளிப்பது. இதையடுத்து டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இதனால் ஆளும் அதிமுகவும், எதிர்க்கட்சி திமுகவும் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணி கட்சிகளிடம் இருகட்சிகளும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் அறிவித்துள்ளார்.

ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட வியாபார பங்கீடு மட்டுமே அரங்கேறப்போவதாகவும் அதனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளார். 2021ல் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆகுவதே லட்சியம் எனவும் தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த ரஜினியும் உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என இன்று காலையில் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் தனது மன்ற பெயரையும், தனது படத்தையும் யாரும் உபயோகப்படுத்த கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே வர இருக்கிற உள்ளாட்சித்தேர்தலிலும் தனித்து போட்டியிடப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருக்கிறார். ஊரக உள்ளாட்சி பதவிகளில் அனைத்து இடங்களிலும் போட்டியிடப் போவதாகவும் இதற்காக வேட்பாளர்களை தேர்வு செய்ய குழு அமைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக தினரகன், சீமான், கமல் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர். அதில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது. 

அதன்பிறகு நடத்த வேலூர் தேர்தல் மற்றும் இரண்டு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தினகரனும் கமலும் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொள்ள, சீமானின் நாம் தமிழர் போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.