திரை நட்சத்திரங்களை குறி வைத்து பாஜகவும், அதிமுகவும் ஆள் பிடித்து வரும் நிலையில் இரண்டு கட்சிகளிடமுமே குஷ்பு தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் நெருங்குகிறது என்றால் சினிமாவில் மார்கெட் போன நடிகைகள், ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த நடிகைகள், கவர்ச்சி நடிகைகள் காட்டில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டும். ஏனென்றால் பிரச்சாரத்திற்கு உதவியாக இருப்பார்கள் என்று திமுக, அதிமுக மட்டும் அல்லாமல் தற்போது பாஜகவினரும் நடிகைகளை தங்கள் கட்சிகளில் சேர்த்து வருகின்றன. அதிலும் முன்னணி நடிகைகள், ஆங்கிலம் பேசத் தெரியும் என்றால் அவர்களுக்கான டீலிங்கே தனி. ஏற்கனவே பாஜக பல்வேறு சினிமா நடிகைகள் மட்டும் அல்லாமல் சீரியல் நடிகைகளையும் வளைத்துப் போட்டுள்ளது.

இது தவிர பல முன்னணி நடிகைகளையும் பாஜக தங்கள் பக்கம் இழுக்க காய் நகர்த்தி வருகிறது. அப்படித்தான் கடந்த ஒரு மாத காலமாக பாஜக தரப்பில் இருந்து குஷ்புவிடம் பேசி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பல வருடங்கள் ஆன நிலையில் அங்கு எந்த பதவியும் பெரிய அளவில் கிடைக்கவில்லை. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு கேட்டு குஷ்புவும் அழுத்து போய்விட்டார். இதனால் தான் கடந்த சில நாட்களாக கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் குஷ்பு செயல்பட்டு வருகிறார் என்று குற்றச்சாட்டு உள்ளது. மேலும் தற்போதைய சூழலை பயன்படுத்தி கட்சி மாறவும் குஷ்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனங்களை முன் வைத்து வரும் நிலையில் அதனை வெளிப்படையாக ஆதரித்து குஷ்பு பாஜகவிற்கே இன்ப அதிர்ச்சி கொடுத்தது. ஏற்கனவே குஷ்புவிடம் நெருங்கி வந்த குஷ்பு புதிய கல்விக் கொள்கை ஆதரவிற்கு பிறகு குஷ்புவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. காங்கிரசில் இருப்பது போலவே தேசிய செய்தி தொடர்பாளர், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்று வாக்குறுதியுடன் பாஜக பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளதாக சொல்கிறார்கள்.

அதே சமயம் குஷ்பு அதிமுக பக்கமும் தனது பார்வையை திருப்பியுள்ளதாக சொல்கிறார்கள். பாஜகவை விட சட்டப்பேரவை தேர்தலுக்கு அதிமுக தான் சரியாக இருக்கும் என்று அவர் ஒரு கணக்கு போடுவதாக சொல்கிறார்கள். கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் ஆசையுடன் தான் திமுகவில் சேர்ந்து குஷ்பு அரசியலுக்கே வந்தார். ஆனால் பத்து வருடங்களாக அரசியலில் இருந்தும் இன்னும் ஒரு தேர்தலில் கூட போட்டியிட முடியவில்லை. பாஜகவில் இணைந்து சட்டப்பேரவை தேர்தலில் களம் இறங்கினாலும் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று குஷ்பு யோசிக்கிறார் என்கிறார்கள்.

அதிமுக என்றால் வெற்றிக்கான வாய்ப்பு இருப்பதால் அந்த பக்கம் போனால் என்ன என்று குஷ்புவுக்கு அவருக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை கூறி வருகிறார்கள். கடந்த 2011ம் ஆண்டு திமுகவில் சேரும் போதே குஷ்பு அதிமுகவிலும் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று சொல்வார்கள். ஆனால் அப்போது சசிகலா தரப்பு குஷ்புவை அதிமுகவில் சேர்க்க விரும்பவில்லை. இதனால் தான் குஷ்பு திமுகவில் சேர்ந்தார் என்றும் கூறுவார்கள். ஆனால் தற்போது அதிமுக வேறு தலைமையின் கீழ் உள்ளதால் அந்த கட்சியில் சேருவதில் குஷ்புவுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

மேலும் கடந்த சில வருடங்களாக குஷ்பு பெரிய அளவில் அதிமுக அரசை விமர்சித்து பேசவில்லை. எனவே அதிமுகவில் சேருவது அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தாது என்கிறார்கள். அதே போல் பாஜகவை ஒப்பிடுகையில் அதிமுக அதிக வாய்ப்புளை கொண்ட கட்சி என்றும் குஷ்பு நினைக்கலாம். எனவே பாஜகவா? அதிமுகவா? என்றால் குஷ்பு அதிமுகவை தேர்வு செய்ய வாய்ப்பு அதிகம் என்று சொல்லலாம். ஆனால் தொடர்ந்து தான் காங்கிரசில் இருப்பதாக குஷ்பு கூறியே வருவதால் ஒருவேளை மேலிடம் சமதானத்திற்கு முன்வந்தால் அதனை பயன்படுத்தி காங்கிரஸ் மேலிடத்துடன் பேரம் பேசவும் வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது.