மறந்து போச்சா மருத்துவரே என ராமதாஸுக்காக தொடர் ஒன்றை வெளியிட்டு வருகிறது முரசொலி நாளிதழ். அதில் ராமதாஸின் பழைய செயல்பாடுகளை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இன்றைய தொடரில், ‘’நம்முடைய முத்தமிழறிஞர் கருணாநிதி பிறந்த நாளை இன்றைகு சமூகநீதி நாளாக  நாம் கொண்டாடுகிறோம். கருணாநிதியைப்போல்  ஒரு சமூகநீதியானவர் - சமூகநீதிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர், அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு பிறகு இந்தியாவிலேயே சொல்ல வேண்டுமானால் கருணாநிதியைத் தான் சொல்ல வேண்டும். சமூக நீதிக்காக அவர் ஆற்றிய பணிகளை ஏராளமாக பட்டியலிட முடியும். 

தன்னை மிக மிக பிற்படுத்தப்பட்டவர் என்று சொல்லிக் கொள்வதில் கருணாநிதி பெருமை கொள்பவர். மிக எத்தனை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்வார். எனக்குப்பிடித்த வார்த்தை அது. கருணாநிதி ஆட்சிப்பொறுப்பேற்றது, சமூக நீதிக்காக பல்வேறு காரியங்களை செய்து இருக்கிறார். 

அதிலே 27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஒரு அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று சட்டப்பேரவையிலேயே தீர்மானம் கொண்டு  வந்ததை பாராட்ட வார்த்தைகளே இல்லை.  கருணாநிதி கொண்டு வந்த தீர்மானத்தை வைத்து தான் அதை அப்படியே நான் வடித்தெடுத்து இந்தியவில் இருக்கிற பிற மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி இருக்கிறேன். 

இன்னொரு அற்புதமான காரியத்தை கருணாநிதி செய்திருக்கிறார்.  அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டம் தான் அது. அப்பொழுது நான் டெல்லியில் இருந்தேன். 23ம் தேதி காலை 7 மணிக்கு கருணாநிதியுடன் தொடர்பு கொண்டு பெரியாரின் நெஞ்சிலே தைத்திருந்த முள்ளை நீக்கி விட்டீர்களே  என்று நான் அவரை பாராட்டினேன்.’’ என்றெல்லா பேசியது மறந்து போச்சா மருத்துவரே? கருணாநிதியை அண்ணல் அம்பேத்கருக்கு பிறகு தந்தை பெரியாருக்கு பிறகு அன்று சொன்னது மறந்து போச்சா மருத்துவரே?  என கேள்வி எழுப்பியுள்ளது.