தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் திமுக, அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை முன்னிலைப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன. அவருடைய அப்பா மு.க. ஸ்டாலின் முன்பு போட்டியிட்ட ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார் என்றும் அவருடைய தாத்தா கருணாநிதி போட்டியிட்டு வென்ற சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி அல்லது திருவாரூரில் போட்டியிடுவார் என்றும் பல தகவல்கள் உதயநிதியைச் சுற்றி வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதி குறித்து உதயநிதி கருத்து தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி இதுதொடர்பாக கூறுகையில், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடும் தொகுதி குறித்து  கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.  நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கியுள்ள கட்சியில் சேருவீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.