புழல் சிறையில் கைதிகளுக்கு வசதிகள் செய்து தந்தது, அமைச்சருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை என்று திமுக 
பொருளாளர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.சொகுசு விடுதியில் இருப்பது போன்று பல்வேறு வசதிகள் புழல் சிறையில் செய்து கொடுக்கப்பட்டதற்கான புகைப்பட ஆதாரங்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த கைதி ஒருவரும், மதுரை கைதிகள் இருவரும் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வரும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இவர்கள் விலை உயர்ந்த செல்போன்களை பயன்படுத்தி வந்துள்ளனர். கைதிகளுக்கான ஆடையை அணியாமல், சுற்றுலா செல்வதுபோல் நாகரிக உடைகளை அணிந்தும், காலில் ஷூ அணிந்தும் வலம் வரும் 
புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

இதனைத் தொடர்ந்து ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா, புழல் சிறையில் ஆய்வு செய்தார். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகம் கூறியிருந்தார். டிஐஜி முருகேசன் தலைமையில் நடைபெற்ற சோதனையில் 18 டிவிக்கள், மைக்ரோ ஓவன்கள், உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன், புழல் சிறையில் கைதிகளுக்கு வசதிகள் செய்து தந்தது, அமைச்சருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறியுள்ளார். சென்னையை அடுத்த மீஞ்சூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறைத்துறை அமைச்சர் நேரடியாக சிறைகளில் ஆய்வு நடத்த வேண்டும் என்றார். தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான், தமிழகத்தின் மற்ற சிறைகளில் பரவாமல் தடுக்க முடியும். 

சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்து தரப்பட்ட விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் சட்டத்துறை அமைச்சராக இருந்தபோது சிறைகளில் அவ்வப்போது ஆய்வு நடத்தினேன் என்று துரைமுருகன் 
கூறினார்.