கொரோனா வைரஸ் இந்தியாவில் ருத்ரதாண்டவம் ஆடிவரும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அதுகுறித்து கருத்து கூறாமல் இருந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்யுள்ளது. இதானால் அமித்ஷா எங்கே? ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,000ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனாவால் 6,00,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், 1,33,057 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில் 1029ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேவேளையில்குணமடைந்தோர் எண்ணிக்கை 66லிருந்து 79 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் கூறிவருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் உள்துறை அமைச்சரான அமித்ஷா இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் ட்விட்டரில் அமித்ஷா குறித்து "அமித்ஷா எங்கே"என #WhereIsAmitShah என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவிட்டுள்ள பலர், கெரோனா வைரஸ் காரணமாக 3 மாதங்கள் சுய தனிமைப்படுத்துதலை கடைபிடிக்கிறார் அமித்ஷா என்று பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலரோ, அவருடைய முகத்தை மறைப்பதற்காக மாஸ்க் தயாரித்துக்கொண்டிருக்கிறார் என்று பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், அமித்ஷா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், பலர் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். பலர் அவர்களது வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருக்கின்றனர். பலர் இன்னும் வீட்டிற்கே செல்லாமல் உள்ளனர். ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்னும் கொரோனா குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என மிக காட்டமாக பதிவிட்டுள்ளார்.