கர்நாடகாவில் தொடரும் நாடங்களுக்கு மத்தியில் மீண்டும் அவையை ஒத்தி வைத்த சபாநாயகர், இன்று மாலைக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். 
கர்நாடகாவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ததால், குமாரசாமி அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது. இதனால், முதல்வர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தி வருகிறது. தனக்கு மெஜாரிட்டி இருப்பதாகக் கூறி கடந்த 18ம் தேதி நம்பிக்கை ஓட்டெடுப்பு தீர்மானத்தை சபையில் தாக்கல் செய்தார் குமாரசாமி. ஆனால், 4 நாட்கள் ஆகியும் குமாராசாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் காலம் தாழ்த்திவருகிறார்.


 நேற்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் முதல்வர் குமாரசாமிக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், குமாரசாமியோ மேலும் 2 நாட்கள் அவகாசம் கேட்டார். ஆனால், ’இந்த விவகாரத்தில் என்னை பலிகடா ஆக்க வேண்டாம். மேற்கொண்டு அவகாசம் அளிக்க முடியாது. இரண்டு நாட்கள் அவகாசம் அளிக்க முடியாது’ என சபாநாயகர் மறுத்துவிட்டார்.  நேற்றே, பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என்று மீண்டும் உறுதியாக உத்தரவிட்டார்.


இதனையடுத்து, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள கட்சி உறுப்பினர்கள் பேரவையில் அமளியில் ஈடுபட்டார்கள். இந்நிலையில், “ நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தாவிட்டால் நான் ராஜினாமா செய்வேன்.” என்று சபாநாயகர் ரமேஷ்குமார் எச்சரித்தார். “ அதிகாலை வரையிலும் அவையை நடத்த தயாராக உள்ளேன். நீங்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்.” என்று ரமேஷ்குமார் தெரிவித்தார்.இதன்பின், ஒரு வழியாக, ஆளுங் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் இருக்கையில் அமர்ந்தனர்.
இதன்பிறகு நேற்று இரவு 11:40 வரை பேரவஒ நீடித்தது. விவாதத்தின் முடிவில், சபையை இன்று காலை 10 மணிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார் சபாநாயகர். அதேவேளையில் இன்று மாலை 6 மணிக்குள், நம்பிக்கை தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் குமாரசாமிக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார்.

 
 ஆளுநர், சபாநாயகர் என இருவரும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டும், போக்குக்காட்டி குமாரசாமி அதை ஒத்திப்போட்டுவருகிறார். இதற்கிடையே நம்பிக்கை ஓட்டெடுப்பை உடனே நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதேபோல ராஜினாமா செய்த 10 எம்.எல்.ஏ.க்கள் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்ற சபாநாயகர் ரமேஷ்குமாரின் உத்தரவுப்படி இன்று எம்.எல்.ஏ.க்கள் ஆஜராவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.