சசிகலாவை சமாளிப்பது, இரட்டைதலைமை மோதல், திமுகவின் குடைச்சல்களை சமாளிக்கவே அதிமுகவுக்கு பெரும் வேலையாக இருக்கிறது. 

உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழக கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்க தயாராகி வரும் நிலையில், அதிமுகவை விட்டு, பாமக மெல்ல திமுக பக்கம் சாய்ந்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் தேமுதிகவை கூட்டணிக்கு கொண்டுவரவும் திமுக காய் நகர்த்தி வருகிறது. 

உட்கட்சி பூசலால் திண்டாடி வரும் அதிமுக இந்தத் தேர்தலில் கூட்டணி அமைப்பதில் பெரும் பின்னடவை சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சசிகலாவை சமாளிப்பது, இரட்டைதலைமை மோதல், திமுகவின் குடைச்சல்களை சமாளிக்கவே அதிமுகவுக்கு பெரும் வேலையாக இருக்கிறது. சமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போதே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டது. அடுத்தகட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலினை தேமுதிக தலைவர்கள் நேரில் சந்தித்து பேச உள்ளனர். 

இதற்காக மு.க.ஸ்டாலினிடம் நேரம் கேட்டுள்ளனர். ஆனால் ஸ்டாலின் இன்னும் நேரம் ஒதுக்கவில்லை. உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நேரத்தில் பேசிக்கொள்ளலாம் என நினைக்கிறாராம் மு.க.ஸ்டாலின். தேமுதிகவின் வருகையால் திமுகவிற்கு லாபமே. தமிழகம் முழுவதும் பரவலான வாக்கு வங்கியை தேமுதிக வைத்திருக்கிறது. கடந்த சில தேர்தல்களில் வாக்கு வங்கி தேய்ந்திருந்தாலும், ஆளுங்கட்சியான திமுக உடன் சேரும் போது மீண்டும் பழைய நிலைக்கு தேமுதிக வரும்.

அடுத்தகட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் 7 வட மாவட்டங்களாக இருக்கின்றன. இது தேமுதிகவிற்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பாமக இணையான வாக்கு வங்கி இல்லையென்றாலும், ஓரளவு வாக்குகளை தேமுதிக கொண்டுள்ளது. அது திமுகவுடன் இணையும் போது வெற்றி வாக்குகளாக மாறக்கூடும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக விரைவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தேமுதிக கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை பாமகவுடன் திமுக கூட்டணி அமைத்தால், தேமுதிக என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.