நான்கு மாநிலங்களில் காலியாக இருக்கும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில்,  தமிழகத்தில் காலியாக உள்ள 2 தொகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


கேரளா, சட்டீஸ்கர், திரிபுரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒவ்வொரு தொகுதிக்கும் செப்டம்பர் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான அறிவிப்பை நேற்று முன் தினம் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வழக்கமாக இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்போது, நாடு முழுவதும் காலியாக உள்ள தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் இடைத்தேர்தலை அறிவிக்கும். ஏதேனும் தேர்தல் வழக்குகள், சட்டம் ஒழுங்கு போன்ற பிரச்சினைகள் இருந்தால் மட்டுமே தேர்தலை அறிவிப்பை தள்ளி வைப்பார்கள்.

 
தமிழகத்தில் ராதாபுரம், விக்கிரவாண்டி தொகுதிகள் காலியாக இருக்கின்றன.  நாங்குநேரி எம்.எல்.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாகிவிட்டதால் நாங்குநேரி தொகுதி காலியானது.  விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திமுகவின் ராதாமணி உடல் நலக் குறைவால் காலமானதால் அந்தத் தொகுதியும் காலியாக உள்ளது. இந்த இரு தொகுதிகளும் இரண்டு மாதங்களுக்கு மேலாக காலியாக உள்ளது. இந்த இரு தொகுதிகளிலிம் தேர்தலை நடத்தி முடிக்க டிசம்பர் வரை கால அவகாசம் இருக்கின்றன.


ஆனாலும், அண்மையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இடைத்தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்கும்போது, ‘இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகிவிட்டது’ என்று தெரிவித்திருந்தார். எனவே செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.


மற்ற மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  தமிழகத்திலும் அறிவித்திருக்கலாமே என்ற சலசலப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல், 18 தொகுதி இடைத்தேர்தல்  நடத்துவதை ஆளுங்கட்சிக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதும் நினைவு கூரத்தக்கது. இதற்கிடையே அக்டோபர் இறுதியில் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால், அதற்கு முன்பாக தேர்தல் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டிவருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இடைத்தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் செப்டம்பர் 1 முதல் வாக்காளர் சரி பார்ப்பு, திருத்தம் உள்ளிட்ட பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இருப்பதால், அந்தப் பணிகள் முடிந்த பிறகு இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்றும் மாறுபட்ட தகவல் வெளியாகி உள்ளது.