தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. கொரோனா பாதிப்பு தன்மையை பொறுத்து மாநில அரசாங்கம் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பதாக தெரிகிறது. பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை தற்போதைய சூழ்நிலையில் பள்ளிக்கு அனுப்ப முடியாது என்று தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், தொடக்க பள்ளிகள் முதல் மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகிப்பது தொடர்கிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.