தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுவதும் முடிந்த பின்னரே கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81, 970ஆக உள்ளது.  ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,649ஆக அதிகரித்துள்ளது. இதனால், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

கல்லூரிகளுக்கு நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் கல்லூரிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழும்பி வந்த நிலையில் கல்லூரிகள் திறப்பு குறித்தும், செமஸ்டர் தேர்வு குறித்தும்  தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில்;- தமிழகத்தை விட்டு கொரோனா பாதிப்பு நீங்கிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கியுள்ளவர்கள் முழுமையாக கல்லூரிகளில் இருந்து வெளியேறிய பின்பு தூய்மைப்பணி முடித்த பிறகே வகுப்புகள் தொடங்கும். மாணவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை என்ற நிலை உருவாகிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும். கொரோனா தாக்கம் குறைந்த பின்பே செமஸ்டர் தேர்வும், கலந்தாய்வும் நடத்தப்படும். பிஇ கலந்தாய்வுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யவும் அரசு தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.