தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு 500 நாட்களுக்கு முன்பே தயாராகும் வகையில் ‘ஆபரேஷன் 500’ என்ற பிரசார உத்தியை மக்கள் நீதி மய்யம்  இன்று அறிமுகம் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 4 சதவீத வாக்குகளைப் பெற்றது. கட்சியின் பெரிய அளவில் கட்டமைப்புகள் எதுவும் இல்லாமல் 4 சதவீத வாக்குகளைப் பெற்றதால், கமலுக்கு அது மகிழ்ச்சியைக் கொடுத்தது. எனவே சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் கமல்ஹாசன் இறங்கினார். அதன் ஒரு பகுதியாக மநீமவுக்கு 4 பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
மேலும் கட்சியை கிராமங்கள் வரை விரிவாக்கம் செய்யும் வகையில் ஒன்றியம், வார்டுகள் அளவில் நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளையும் மக்கள் நீதி மய்யம் மேற்கொண்டுள்ளது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 500 நாட்கள் பிரசாரத்தை முன்னெடுக்கவும் அக்கட்சி முடிவு செய்திருந்தது. இந்தப் பிரசாரத்துக்கு 'ஆபரேஷன் 500' என்ற பெயரையும் அக்கட்சியினர் சூட்டினர்.  
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்க உள்ளது. அந்தத் தேர்தலை திட்டமிட்டு எதிர்கொள்ள வசதியாக 500 நாட்களுக்கு முன்பாகத் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதாகவும் அக்கட்சி அறிவித்தது.  கமல் பிறந்த நாளான நவம்பர் 7 முதல் இந்தத் தேர்தல் பிரசாரம் தொடங்கும் என்றும் அக்கட்சி நிர்வாகிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

 
இந்நிலையில் இன்று கமல்ஹாசன் தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், ‘ஆபரேஷன் 500’ இன்று தொடங்கப்படுகிறதா என்று தெரியாத நிலை உள்ளது. அக்கட்சி தலைவர் கமல் இதுபற்றி இன்னும் வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை. இன்று பரமக்குடியில் நடைபெறும் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கமல் பங்கேற்கும் நிலையில் ‘ஆபரேஷன் 500’ பற்றி அறிவிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.