பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை கேட்டு பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் இன்று அரசு சார்பில் தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாள் விழா  நடந்தது. பெரியார், அண்ணா நினைவகத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு கலெக்டர் கதிரவன் தலைமையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இதனையடுத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன்;- தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் கோர்ட் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்டு வருகின்றது. ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு மன அழுத்தம் இருப்பதாக பெற்றோர்கள், மாணவர்கள் கூறியதையடுத்து வருகின்ற 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், கூடுதல் பள்ளிக்கட்டணம் வசூலிப்பதாக இதுவரை 14 பள்ளிகள் மீது புகார் வந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய பொருளாதார சூழலில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்குவது என்பது சாத்தியமில்லை. தமிழகத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் மனநிலை மற்றும் கொரோனா பரவல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.